இன்றைய காலகட்டத்தில் ‘லிவ்-இன் ரிலேஷன்ஷிப்’ என்ற பெயரில் பெண்களை ஏமாற்றும் சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில், மதுரை உயர்நீதிமன்றக் கிளை வழங்கியுள்ள தீர்ப்பு பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

திருச்சியைச் சேர்ந்த பிரபாகரன் என்ற வாலிபர், ஒரு பெண்ணைக் காதலித்து அவருடன் லிவ்-இன் முறையில் குடும்பம் நடத்தி வந்துள்ளார். பெற்றோர்கள் எதிர்த்ததால் வீட்டை விட்டு வெளியேறிய இவர்கள், கணவன் – மனைவியாகவே வாழ்ந்துள்ளனர்.

ஆனால், ஒருகட்டத்தில் பிரபாகரனின் உறவினர்கள் மிரட்டியதால், அந்தப் பெண்ணைத் திருமணம் செய்ய அவர் மறுத்துவிட்டார். “திருமணம் செய்வதாகச் சொல்லி என்னைப் பயன்படுத்திக் கொண்டு இப்போது ஏமாற்றுகிறார்” என அந்தப் பெண் மணப்பாறை மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி பிரபாகரன் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதி எஸ்.ஸ்ரீமதி, மிகக் கடுமையான கருத்துக்களைத் தெரிவித்தார். “லிவ்-இன் உறவு என்ற வலையில் சிக்கிப் பெண்கள் தான் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். நவீனத்துவம் என்ற பெயரில் பெண்களைப் பயன்படுத்திவிட்டு, பிறகு அவர்கள் குணத்தைக் குற்றம் சொல்லி ஆண்கள் கழன்று கொள்கிறார்கள்.

ஒரு பெண்ணுடன் பாலியல் ரீதியான தொடர்பில் இருந்துவிட்டு ஏமாற்றுவதை ஏற்க முடியாது. அப்படிப்பட்ட உறவில் இருக்கும் பெண்ணுக்குத் தன்னை மனைவியாக அங்கீகரிக்கக் கோரும் அனைத்து உரிமைகளும் உண்டு” என்று நீதிபதி அதிரடியாகத் தெரிவித்தார்.

மேலும், சமரசமாகப் பணத்தைப் பெற்றுக்கொள்ள அந்தப் பெண் மறுத்தது அவரது நேர்மையைக் காட்டுகிறது என்று குறிப்பிட்ட நீதிபதி, புதிய குற்றவியல் சட்டத்தின் (BNS) கீழ் பிரபாகரன் மீது வழக்குப் பதிவு செய்ய உத்தரவிட்டு அவரது முன்ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்தார்.