இந்திய டி20 கிரிக்கெட் அணியின் கேப்டன் பதவியில் இருந்து சூர்யகுமார் யாதவ் நீக்கப்பட்டது குறித்த விவாதங்கள் எழுந்துள்ள நிலையில், இந்த விவகாரத்தை முன்னாள் கேப்டன் ரோஹித் சர்மாவின் கேப்டன்சி மாற்றத்துடன் ஒப்பிட்டு முன்னாள் வீரர் முகமது கைஃப் அதிரடியான கருத்துக்களைப் பகிர்ந்துள்ளார். 2026 ஐபிஎல் தொடரில் சூர்யகுமார் யாதவ் பேட்டிங்கில் சோபிக்கத் தவறியதைத் தொடர்ந்து, இந்திய டி20 அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து அவர் நீக்கப்பட்டார் என்ற தகவல்கள் வெளியாகி வருகின்றன. இதுகுறித்து பேசியுள்ள முகமது கைஃப், கிரிக்கெட்டில் கேப்டன்சி மாற்றம் என்பது முற்றிலும் பிசிசிஐ மற்றும் தேர்வுக்குழுவின் முடிவைப் பொறுத்தது என்றும், இதில் சூர்யகுமார் யாதவ் பெரிய அளவில் வருத்தப்படத் தேவையில்லை என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் இந்த விவகாரம் குறித்து விரிவாகப் பேசிய கைஃப், “கடந்த காலங்களில் மும்பை இந்தியன்ஸ் அணியில் இருந்து ரோஹித் சர்மா போன்ற ஜாம்பவான் வீரரையே கேப்டன் பதவியில் இருந்து நீக்கியுள்ளனர். ஐந்து முறை ஐபிஎல் கோப்பையை வென்று கொடுத்த ரோஹித் சர்மாவின் கேப்டன் பதவியே பறிக்கப்பட்ட போது, சூர்யகுமார் யாதவின் கேப்டன்சி மாற்றம் என்பது மிகச் சிறிய விஷயம்தான்” என்று ஒப்பிட்டுக் கூறியுள்ளார். எவ்வளவு பெரிய வீரராக இருந்தாலும் ஃபார்ம் மற்றும் அணியின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு மாற்றங்கள் செய்யப்படுவது இயல்பானதுதான் என்றும், எனவே சூர்யகுமார் இந்த முடிவை சாதாரணமாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்று அறிவித்துள்ளார்.
