சமூக வலைதளங்களில் அவ்வப்போது கிளம்பும் வதந்திகள் பொதுமக்களைப் பீதியடையச் செய்வது வழக்கமாகிவிட்டது. அந்த வகையில், தூத்துக்குடியிலிருந்து பேசுவதாகக் கூறிப் பரப்பப்படும் ஒரு ஆடியோ இப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது வாட்ஸ்அப்பில் உலா வரும் அந்த ஆடியோவில், “வாடிக்கையாளர் சேவை மையத்திலிருந்து 6 இலக்க எண்களில் (Customer Call) அழைப்பு வரும்; அதைத் தெரியாமல் கூட எடுத்துவிடாதீர்கள். அந்த அழைப்பை ஏற்றால் செல்போன் வெடித்துவிடும்; தூத்துக்குடியில் இப்படித் தான் 27 பேர் உயிரிழந்துவிட்டார்கள்” எனப் பதற வைக்கும் தகவல் பகிரப்பட்டுள்ளது.

இதுகுறித்துத் தூத்துக்குடி மாவட்ட காவல்துறை தீவிர விசாரணை நடத்தியதில், இது முற்றிலும் பொய்யான தகவல் என்பதும், பல ஆண்டுகளுக்கு முன்பு பரவிய ஆடியோவை மீண்டும் யாரோ விஷமிகள் பரப்பி வருவதும் தெரியவந்துள்ளது.

தூத்துக்குடியில் இதுபோன்று எந்தச் சம்பவமும் நடக்கவில்லை என்றும், பொதுமக்கள் யாரும் இதை நம்பி அச்சப்படத் தேவையில்லை என்றும் காவல்துறை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.