உத்தரப்பிரதேச மாநிலம் மன்பூர் கிராமத்தில், பிரசவித்த பெண்ணுக்கு வழங்கப்படும் ‘ஹரிரா’ எனும் சத்தான உணவைச் சாப்பிடுவதில் மாமியாருக்கும் மருமகளுக்கும் இடையே ஏற்பட்ட மோதல் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மூன்று நாட்களுக்கு முன்பு ஆண் குழந்தையைப் பெற்றெடுத்த அந்தப் பெண், தனக்காகச் செய்யப்பட்ட சத்தான உணவை மாமியாரே மொத்தமாகச் சாப்பிட்டுவிட்டதாகக் குற்றம் சாட்டினார். இதனால் ஆத்திரமடைந்த அவர், உடனடியாக காவல்துறை அவசர எண்ணான 112-க்கு அழைத்து புகார் அளித்தார்.
ஒரு கிண்ணம் உணவுக்காக மருமகள் போலீஸாரை அழைத்த சம்பவம் கிராமம் முழுவதும் பேசுபொருளானது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீஸார், இது பெரிய குற்றச் சம்பவம் அல்ல என்பதை உணர்ந்து இருதரப்பையும் அமர வைத்துப் பேசினர்.
இதுபோன்ற சிறிய குடும்பப் பிரச்சனைகளுக்காகப் போலீஸாரை அழைப்பது குடும்பத்தின் பெயரைக் கெடுக்கும் என்று அறிவுரை வழங்கினர். போலீஸாரின் நிதானமான பேச்சைக் கேட்டு மாமியாரும் மருமகளும் சமாதானமாகி, புகாரைத் திரும்பப் பெற்றுக் கொண்டனர்.
எந்தவித சட்ட நடவடிக்கையும் இன்றி, போலீஸாரின் சமயோசித புத்தியால் இந்த விசித்திரமான ‘உணவுச் சண்டை’ சுமூகமாக முடிவுக்கு வந்தது.
