கடந்த ஆண்டு செப்டம்பர் 27-ஆம் தேதி தவெக கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். அப்போது உயிரிழந்தவர்களின் உடல்களைப் பார்த்து அமைச்சர் அன்பில் மகேஷ் கண்ணீருடன், “ரூல்ஸை பாலோ பண்ணுங்கடான்னு சொன்னோமே” என்று உருக்கமாகப் பேசியிருந்தார்.
இந்த துயரமான சம்பவத்தின் போது வெளிப்பட்ட அந்த வசனத்தை, நடிகர் ஜீவா தனது ‘தலைவர் தம்பி தலைமையில்’ திரைப்படத்தில் ஒரு நகைச்சுவைக் காட்சியாகப் பயன்படுத்தியுள்ளார். மேலும், படத்தின் விளம்பர நிகழ்ச்சியிலும் இந்த வசனத்தை அவர் சிரித்தபடியே பேசி விளையாடியது பொதுமக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து எழுந்த விமர்சனங்களுக்குப் பதிலளித்த ஜீவா, இந்த வசனத்தை இயக்குநர் சொல்லித்தான் தான் பேசியதாகவும், யாருடைய மனதையும் புண்படுத்தும் எண்ணம் தனக்கு இல்லை என்றும் விளக்கமளித்துள்ளார். ஆனால், இவ்வளவு பெரிய உயிர் இழப்புகள் நடந்த ஒரு சம்பவத்தை நகைச்சுவைக்காகப் பயன்படுத்தியது தவறு என நெட்டிசன்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். சர்ச்சையான சூழலிலும் ஜீவா சிரித்தபடியே விளக்கமளித்ததும், குறைந்தபட்ச வருத்தம் கூட தெரிவிக்காததும் சமூக வலைதளங்களில் பலத்த விவாதங்களை உருவாக்கியுள்ளது.
