உத்தரப்பிரதேச மாநிலம் குஷிநகர் மாவட்டம் தர்யாசுஜன் காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் காதல் திருமணம் செய்துகொண்ட தம்பதியினர் ரத்த வெள்ளத்தில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அருண் சர்மா மற்றும் நேகா பாரதி ஆகிய இருவரும் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் பெற்றோரின் எதிர்ப்பையும் மீறி காதல் திருமணம் செய்துகொண்டனர்.
தொடக்கத்தில் மகிழ்ச்சியாக இருந்த இவர்களது வாழ்க்கையில் சில காலங்களிலேயே சந்தேகம் மற்றும் கருத்து வேறுபாடுகள் காரணமாக விரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்த நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மீண்டும் இவர்களுக்குள் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இந்த மோதல் உச்சக்கட்டத்தை எட்டியபோது ஆத்திரமடைந்த அருண் சர்மா மறைத்து வைத்திருந்த கூர்மையான ஆயுதத்தால் தனது மனைவி நேகாவின் கழுத்தை அறுத்துக் கொடூரமாகக் கொலை செய்துள்ளார். மனைவியின் மரணத்தைத் தொடர்ந்து மனமுடைந்த அருண் அதே அறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.
இது குறித்துத் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மற்றும் தடயவியல் நிபுணர்கள் உடல்களைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். குடும்பத்தினரின் எதிர்ப்பை மீறி இணைந்த காதல் ஜோடி திருமணமான சில மாதங்களிலேயே உயிரிழந்தது குறித்து போலீசார் பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
