தன்பாலின உறவுக்கு (Lesbian) இடையூறாக இருந்த கணவனை, மனைவி தனது தோழியுடன் சேர்ந்து கூலிப்படை ஏவிக் கொடூரமாகக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த விவசாயி சுமர் சிங் (33) என்பவர், சமீபத்தில் வயல்வெளியில் மர்மமான முறையில் பிணமாகக் கண்டெடுக்கப்பட்டார். அவரது உடலில் காயங்கள் இருந்ததைக் கண்ட போலீசார், உடலை மீட்டுப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணையைத் தொடங்கினர்.

போலீசார் நடத்திய தீவிர விசாரணையில், சுமர் சிங்கின் மனைவி ரேணு தேவி (28) மற்றும் அவரது தோழி மால்தி தேவி (27) ஆகியோரே இந்தக் கொலைக்கு மூளையாகச் செயல்பட்டது தெரியவந்தது. ஏற்கெனவே மூன்று திருமணங்கள் செய்து கணவர்களைப் பிரிந்த மால்தி தேவிக்கும், ரேணு தேவிக்கும் இடையே நீண்ட காலமாகத் தன்பாலின உறவு இருந்து வந்துள்ளது.

சுமர் சிங் வீட்டில் இல்லாத நேரங்களில் மால்தி தேவி அங்கு வந்து ரேணுவுடன் தனிமையில் இருந்துள்ளார். ஒருமுறை வேலை முடிந்து எதிர்பாராத விதமாக வீடு திரும்பிய சுமர் சிங், இருவரும் நெருக்கமாக இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். இதனால் குடும்பத்தில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. மால்தி தேவி வீட்டிற்கு வரக் கூடாது எனச் சுமர் சிங்கின் குடும்பத்தினர் கடும் தடை விதித்தனர்.

தங்கள் உறவுக்குத் தடையாக இருந்த கணவனைத் தீர்த்துக்கட்ட முடிவு செய்த ரேணு தேவி, தனது தோழியுடன் சேர்ந்து ஜித்தேந்திர குப்தா என்ற நபரைக் கூலிப்படையாக அமர்த்தினார். இதற்காக ரூ. 60 ஆயிரம் பேசப்பட்டு, முன்பணமாக ரூ. 8 ஆயிரம் வழங்கப்பட்டது.

திட்டமிட்டபடி, ஜித்தேந்திர குப்தா தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து சுமர் சிங்கை கழுத்தை நெரித்தும், சுத்தியலால் தாக்கியும் கொடூரமாகக் கொலை செய்து உடலை வயலில் வீசினர்.

தற்போது ரேணு தேவி, மால்தி தேவி மற்றும் கூலிப்படையைச் சேர்ந்த ராஜு சோன்கர் ஆகிய மூவரைப் போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் இருந்து 3 செல்லிடப்பேசிகள் மற்றும் கொலைக்குப் பயன்படுத்தப்பட்ட கயிறு பறிமுதல் செய்யப்பட்டன. தலைமறைவாக உள்ள ஜித்தேந்திர குப்தா மற்றும் ராம் பிரகாஷ் ஆகியோரை போலீசார் வலைவீசித் தேடி வருகின்றனர்.