கள்ளக்காதலியைக் கொலை செய்து, அவரது உடலை இரும்புப் பெட்டிக்குள் வைத்து எரித்த ஓய்வுபெற்ற ரயில்வே ஊழியரின் செயல் உத்தரப் பிரதேசத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜான்சி மாவட்டம் ஐ.டி.ஐ. பகுதியைச் சேர்ந்த பிரீத்தி (32) என்பவருக்கும், ஓய்வுபெற்ற ரயில்வே ஊழியரான ராம் சிங் (62) என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியுள்ளது. ஏற்கனவே இரு மனைவிகள் உள்ள நிலையில், ராம் சிங் தனது 3-வது காதலியான பிரீத்தியுடன் லேகர் கோன் பகுதியில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து ரகசியமாகத் தங்கி வந்துள்ளார்.
சம்பவத்தன்று பிரீத்தி, ராம் சிங்கிடம் அடிக்கடி பணம் கேட்டுத் தகராறு செய்ததாகக் கூறப்படுகிறது. இதில் ஆத்திரமடைந்த ராம் சிங், கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு பிரீத்தியை அடித்துக் கொலை செய்துள்ளார். பின்னர் கொடூரமான முறையில் உடலைத் துண்டு துண்டாக வெட்டி, ஒரு பெரிய இரும்புப் பெட்டிக்குள் வைத்துள்ளார். அதன் மீது விறகுகளைக் குவித்து பெட்டிக்குள்ளேயே தீ வைத்துள்ளார்.
உடல் பாகங்கள் எரிந்து சாம்பலான பிறகு, அந்தப் பெட்டியை அப்புறப்படுத்த ராம் சிங் ஒரு லோடு ஆட்டோவை அழைத்துள்ளார். சிப்ரி பஜார் பகுதிக்குச் சென்றபோது, பெட்டியிலிருந்து கடுமையான துர்நாற்றம் வீசியதாலும், ராம் சிங்கின் நடத்தையில் சந்தேகம் அடைந்ததாலும் ஆட்டோ ஓட்டுநர் உடனடியாகக் காவல்துறையினருக்குத் தகவல் அளித்தார்.
போலீசார் சம்பவ இடத்திற்கு வருவதைக் கண்ட ராம் சிங், பெட்டியை அங்கேயே விட்டுவிட்டுத் தப்பியோடிவிட்டார். அந்த இரும்புப் பெட்டியை உடைத்துப் பார்த்தபோது, அதில் சாம்பலும் சில எலும்புகளும் மட்டுமே எஞ்சியிருந்தன. அவற்றை மீட்ட போலீசார் தடயவியல் ஆய்வுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
இந்தக் கொலை வழக்கில் ராம் சிங்கின் மகனுக்கும் தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். தற்போது தலைமறைவாக உள்ள ராம் சிங்கை பிடிக்கத் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது
