பிரபல இசையமைப்பாளர் இளையராஜா அவர்களுக்கு, 11-வது அஜந்தா – எல்லோரா சர்வதேச திரைப்பட விழாவில் உயரிய விருதான ‘பத்மபாணி’ விருது வழங்கப்பட உள்ளது. இந்திய திரை இசைக்கு அவர் ஆற்றிய இணையற்ற பங்களிப்பைக் கௌரவிக்கும் வகையில் இந்த விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் வரும் ஜனவரி 28 முதல் பிப்ரவரி 4 வரை மகாராஷ்டிராவின் சத்ரபதி சம்பாஜி நகரில் நடைபெறவுள்ள இவ்விழாவின் தொடக்க நாளன்று (ஜனவரி 28), ருக்மிணி அரங்கில் இளையராஜாவுக்கு இந்த விருது வழங்கப்பட உள்ளது. இந்த விருதானது ஒரு நினைவுச் சின்னம், பாராட்டுப் பத்திரம் மற்றும் இரண்டு லட்ச ரூபாய் ரொக்கப் பரிசு ஆகியவற்றை உள்ளடக்கியது.

இந்த ஐந்து தசாப்தங்களுக்கும் மேலான தனது இசைப் பயணத்தில், 1,500-க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்து, 7,000-க்கும் அதிகமான பாடல்களைத் தந்துள்ள இளையராஜாவின் சாதனை உலகளாவியது. புகழ்பெற்ற திரைப்பட விமர்சகர் லத்திகா பட்கோங்கர் தலைமையிலான தேர்வுக் குழு, அவரது ஆன்மீகத் தேடல், தொழில்நுட்ப ஒழுக்கம் மற்றும்

இசையின் ஊடாக அவர் வெளிப்படுத்தும் மனித உணர்வுகள் ஆகியவற்றை முன்னிறுத்தி இந்த விருதை வழங்க ஒருமனதாக முடிவு செய்துள்ளது. முன்னதாக ஜாவேத் அக்தர், சாய் பரஞ்ச்பை மற்றும் ஓம் பூரி போன்ற ஜாம்பவான்கள் இந்த விருதைப் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது 82 வயதாகும் ‘இசைஞானி’க்கு வழங்கப்படும் இந்த அங்கீகாரம், அவரது இசைப் பேரரசுக்குக் கிடைத்துள்ள மற்றுமொரு மகுடமாகும்.