இந்தியாவில் அடுத்த மாதம் தொடங்கவுள்ள ஐசிசி டி20 உலகக் கோப்பைத் தொடரை வங்கதேச அணி புறக்கணிக்கும் சூழல் உருவாகியுள்ளதால் சர்வதேச கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. முன்னதாக, ஐபிஎல் தொடருக்காக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியால் ஏலம் எடுக்கப்பட்ட வங்கதேச வேகப்பந்து வீச்சாளர் முஸ்டாபிஸுர் ரஹ்மானை விடுவிக்குமாறு பிசிசிஐ அறிவுறுத்தியது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள வங்கதேச கிரிக்கெட் வாரியம், இந்தியாவில் நிலவும் சூழலைக் கருத்தில் கொண்டு பாதுகாப்பு காரணங்களுக்காக அங்கு விளையாட முடியாது எனத் தெரிவித்துள்ளது. வங்கதேச அணி பங்கேற்க வேண்டிய 4 லீக் ஆட்டங்களையும் இலங்கைக்கு மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையை ஐசிசி நிராகரித்ததால், உலகக் கோப்பையை புறக்கணிக்கும் முடிவை நோக்கி அந்த நாடு சென்று கொண்டிருக்கிறது.

இந்த நெருக்கடியான சூழலில், வங்கதேச கிரிக்கெட் வாரிய இயக்குநர் நஜ்முல் இஸ்லாம் வீரர்களைக் கடுமையாக விமர்சித்தது எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றுவது போல அமைந்துள்ளது. உலகக் கோப்பையை புறக்கணித்தால் வீரர்களுக்கு ஊதியம் வழங்கப்படாது என்றும், இதுவரை எந்த உலகக் கோப்பையையும் வெல்லாத இவர்களுக்கு எதற்காகக் கோடிக்கணக்கில் பணம் தர வேண்டும் என்றும் அவர் பேசியது பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வங்கதேச பிரிமீயர் லீக் போட்டிகளை முன்னணி வீரர்கள் புறக்கணித்தனர். நிலைமை மோசமடைந்ததைத் தொடர்ந்து, நஜ்முல் இஸ்லாம் வாரியத்தின் நிதிக் குழுவிலிருந்து நீக்கப்பட்டார். இதையடுத்து வீரர்கள் சங்கத் தலைவர் முகமது மிதுனுடன் வாரியம் நடத்திய சமரசப் பேச்சுவார்த்தையில், நஜ்முல் இஸ்லாம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் வீரர்கள் மீண்டும் விளையாடச் சம்மதித்தனர்.

இதனிடையே, வீரர்களின் உரிமைகளுக்காகக் குரல் கொடுத்து வரும் தமக்குக் கொலை மிரட்டல்கள் வருவதாக முகமது மிதுன் புகார் தெரிவித்துள்ளார். அறியாத எண்களில் இருந்து வாட்ஸ்அப் வழியாகத் தொடர்ந்து மிரட்டல்கள் வருவதாகவும், தமக்குப் போலவே மேலும் சில வீரர்களுக்கும் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கவலை தெரிவித்துள்ளார்.

நாட்டுக்கு எதிராகத் தாம் பேசவில்லை என்றும், வீரர்களின் பாதுகாப்பை உறுதி செய்வது மட்டுமே தமது நோக்கம் என்றும் அவர் விளக்கம் அளித்துள்ளார். உயிருக்கு அச்சுறுத்தல் இருக்கும் இடத்தில் எவரையும் விளையாட வற்புறுத்த முடியாது என்றாலும், உலகக் கோப்பையின் முக்கியத்துவத்தைக் கருதி வாரியமும் அரசும் சுமூகமான ஒரு முடிவை எடுக்கும் என்று கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.