ராஜஸ்தான் மாநிலம் பில்வாரா மாவட்டத்தில் உள்ள மான்புரா கிராமத்தில், சமூக வலைதள வீடியோக்களால் ஏற்பட்ட தவறான அச்சத்தினால் தாய் ஒருவரே தனது இரு குழந்தைகளைக் கொடூரமாகக் கொலை செய்த அதிர்ச்சிகரமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. சஞ்சு தேவி என்ற அந்தப் பெண்ணுக்கு நீண்ட நாட்களாக வாயில் புண்கள் இருந்துள்ளன.
இது குறித்து அவர் சமூக வலைதளங்களில் வந்த வீடியோக்களைப் பார்த்தபோது, நீண்ட கால வாய் புண்கள் புற்றுநோயின் அறிகுறி என்று தவறான புரிதல் ஏற்பட்டுள்ளது. தனக்கு புற்றுநோய் இருப்பதாகவும், தான் இறந்த பிறகு குழந்தைகளைக் கவனிக்க யாரும் இருக்க மாட்டார்கள் என்ற பயத்திலும், அவர் தனது மகன் மற்றும் மகளின் கழுத்தில் ஆணியால் குத்தி உயிரிழக்கச் செய்துள்ளார்.
இந்தக் கொடூரச் செயலைச் செய்த பிறகு, சஞ்சு தேவி தனது கணவருக்குத் தொலைபேசி வாயிலாகத் தகவல் தெரிவித்துவிட்டுத் தானும் தற்கொலைக்கு முயன்றுள்ளார். அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அவர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இதனால் சிகிச்சைக்குப் பின் குணமடைந்த அவரைப் பில்வாரா காவல்துறையினர் தற்போது கைது செய்துள்ளனர். ஒரு தாய் தனது குழந்தைகளின் எதிர்காலத்தைப் பற்றிய மிகைப்படுத்தப்பட்ட பயத்தினாலும், முறையான மருத்துவ ஆலோசனை பெறாமல் சமூக வலைதளத் தகவல்களைத் தவறாக நம்பியதாலும் ஒரு குடும்பமே சிதைந்துள்ள இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
