மத்தியப் பிரதேச மாநிலம் சிவபுரி மாவட்டத்தில், வெறும் 100 கிராம் நெய் தொடர்பான குடும்பச் சச்சரவால் இளம்பெண் ஒருவர் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்ட நெஞ்சைப் பிளக்கும் சம்பவம் அரங்கேறியுள்ளது. இம்லோடி கிராமத்தைச் சேர்ந்த சோனம் ஜாதவ் என்ற பெண்ணிற்கும், அவரது மாமியாருக்கும் இடையே நீண்ட நாட்களாகவே கருத்து வேறுபாடு இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.

இதனால் சோனம் தன் கணவர் மற்றும் குழந்தைகளுடன் ஒரே வீட்டில் வசித்தாலும், மாமியாருடன் சேராமல் தனியாகவே சமைத்து உண்டு வந்துள்ளார். சம்பவத்தன்று, மாமியார் நெய் கேட்டபோது சோனம் கொடுக்க மறுத்துள்ளார், ஆனால் கணவர் தலையிட்டு 100 கிராம் நெய்யை சோனத்திடமிருந்து வாங்கித் தந்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து கணவர் தனபால், கடையிலிருந்து மேலும் கூடுதல் நெய்யை வாங்கி வந்து தனது தாயிடம் கொடுத்தது சோனத்திற்கு மிகுந்த ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் மாமியாருக்கும் மருமகளுக்கும் இடையே கடும் வாக்குவாதம் வெடித்த நிலையில், மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான சோனம் வீட்டில் இருந்த விஷத்தை எடுத்து குடித்துவிட்டார். உடனே அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இது குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், இது வெறும் நெய் தொடர்பான பிரச்சனை தானா அல்லது குடும்பத்தினர் தரப்பில் ஏதேனும் கூடுதல் கொடுமைகள் நடந்ததா என்ற கோணத்தில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரு சிறு பொருளுக்காக நேர்ந்த இந்த உயிரிழப்பு அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.