உத்தரப் பிரதேச மாநிலம் பண்டா மாவட்டத்தைச் சேர்ந்த 19 வயது இளம் பெண் ஷிவானி, தனது பக்கத்து வீட்டில் வசித்து வந்த லலித் வர்மா என்ற இளைஞரைக் காதலித்து வந்துள்ளார். இவர்களின் காதலுக்குப் பெண்ணின் வீட்டில் கடுமையான எதிர்ப்பு கிளம்பியதால், கடந்த மே 18 அன்று இருவரும் வீட்டை விட்டு வெளியேறி, ஒரு கோவிலில் வைத்துத் திருமணம் செய்து கொண்டு, முறைப்படி பதிவும் செய்து கொண்டனர்.
இதற்கிடையே, லலித் வர்மா தங்களது மகளைக் கடத்திச் சென்றுவிட்டதாக ஷிவானியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். வழக்குப் பதிவு செய்த தனிப்படை போலீஸார், அண்டை மாநிலமான மத்தியப் பிரதேசத்தில் மறைந்திருந்த காதலர்களைக் கடந்த வெள்ளிக்கிழமை மீட்டு காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர். விசாரணையில், தாங்கள் இருவரும் விருப்பப்பட்டுத்தான் திருமணம் செய்து கொண்டோம் எனக் கூறி திருமண ஆவணங்களை போலீஸாரிடம் காட்டியுள்ளனர்.
இந்தத் தகவலறிந்து இருதரப்பு குடும்பத்தினரும் காவல் நிலையத்திற்கு வந்து சேர்ந்தனர். அப்போது ஷிவானியின் பெற்றோர், கணவனை மறந்துவிட்டு தங்களுடன் வீட்டிற்கு வந்துவிடுமாறு ஷிவானிக்குக் கடுமையான அழுத்தம் கொடுத்துள்ளனர். ஆனால், ஷிவானி தனது கணவர் லலித்துடன் மட்டுமே வாழ்வேன் என்று திட்டவட்டமாகக் கூறி மறுத்துவிட்டார். இதனால் காவல் நிலையத்திற்குள்ளேயே வாக்குவாதம் முற்றவே, ஆத்திரத்தின் உச்சிக்குச் சென்ற ஷிவானியின் தாய் ரன்னோ, தனது மகள் ஷிவானியைப் பின்னால் இருந்து தப்பிக்க முடியாதபடி இறுக்கமாகக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டார்.
அடுத்த நொடியே, ஷிவானியின் தந்தை தான் மறைத்து வைத்திருந்த கூர்மையான கத்தியை எடுத்து, போலீஸாரின் கண்முன்னே ஷிவானியின் வயிற்றில் சரமாரியாகக் குத்தினார். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த ஷிவானி, அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். போலீஸ் ஸ்டேஷனிலேயே நடந்த இந்த பயங்கரக் கொலை தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு, ஷிவானியின் தந்தை உடனடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார்.
