தமிழக முதல்வர் ஜோசப் விஜய் அண்மையில் டெல்லிக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டிருந்த நிலையில், அங்கு நடைபெற்ற அரசியல் சந்திப்புகள் தேசிய அளவிலும், தமிழக அரசியலிலும் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளன. தமிழகத்தில் தவெக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ் கட்சி முக்கியப் பங்கு வகிக்கும் சூழலில், டெல்லி சென்ற முதல்வர் விஜய் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களான சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோரை நேரில் சந்தித்துப் பேசினார். தமிழகத்தில் பலவீனமடைந்து வரும் காங்கிரஸுக்கு, தவெக ஆட்சியமைக்கக் கைகொடுத்ததன் மூலம் முதல்வர் விஜய் புதிய உயிர் கொடுத்துள்ளதாகக் கூறி, மத்திய ஆளும் தரப்பான பாஜக இதற்கு கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளதாக டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மறுபுறம், டெல்லி பயணத்தின் போது மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவைச் சந்திக்க முதல்வர் விஜய் தரப்பில் நேரம் கேட்கப்பட்டிருந்ததாகவும், ஆனால் அந்த அப்பாயின்மென்ட் ரத்து செய்யப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகிப் பரவி வருகின்றன. அரசு அதிகாரப்பூர்வக் குழுவினருடன் வராமல், தனிப்பட்ட நண்பர்களுடன் வந்ததாலேயே பிஸியான சூழலில் அமித் ஷா இந்த சந்திப்பைத் தவிர்த்தார் என ஒரு தரப்புக் கூறினாலும், காங்கிரஸ் தலைவர்களை விஜய் நெருங்குவதால் ஏற்பட்ட அரசியல் கோபமே இந்த சந்திப்பு ரத்தானதற்குக் காரணம் என்றும் டெல்லி அரசியல் வட்டாரத்தில் கிசுகிசுக்கப்படுகிறது. இதனால், டெல்லியில் அரங்கேறிய இந்த அரசியல் நகர்வுகள் தமிழக பாஜக மற்றும் தவெக கூட்டணி இடையே புதியதொரு அரசியல் மோதலுக்கு வித்திட்டுள்ளது.