இல்லத்தரசிகள் வீட்டில் இருந்தபடியே தங்களது ஓய்வு நேரத்தைப் பயன்படுத்தி, மணிக்கு 250 ரூபாய் வரை வருமானம் ஈட்டலாம் என்ற கவர்ச்சிகரமான விளம்பரங்களுடன் புதிய ‘செயற்கை நுண்ணறிவு’ (AI) வேலைவாய்ப்பு ஒன்று தற்போது வேகமாகப் பரவி வருகிறது. இந்தத் திட்டத்தின்படி, இல்லத்தரசிகளுக்குத் தலையில் பொருத்தும் வகையிலான சிறிய கேமராக்கள் மற்றும் பிற சாதனங்கள் வழங்கப்படும். அவர்கள் தங்களது அன்றாட வீட்டு வேலைகளான சமையல் செய்தல், வீட்டைப் பெருக்குதல் மற்றும் குழந்தைகளைப் பராமரித்தல் போன்றவற்றைச் செய்யும்போது, இந்த கேமராக்கள் அவர்களின் ஒவ்வொரு அசைவுகளையும், வீட்டுச் சூழலையும் வீடியோவாகப் பதிவு செய்யும்.

இந்தத் தரவுகள் (Data) அனைத்தும் ஏஐ தொழில்நுட்ப மேம்பாட்டிற்காகச் சேகரிக்கப்படுவதாகக் கூறி, பெண்களைக் குறிவைத்து இந்த வேலைகள் சத்தமில்லாமல் ஆள்சேர்ப்பு செய்யப்பட்டு வருகின்றன.இருப்பினும், இந்த வேலைவாய்ப்பிற்குப் பின்னால் மிகப்பெரிய தனியுரிமை (Privacy) ஆபத்துகள் மறைந்திருப்பதாகத் தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இன்று 250 ரூபாய்க்கு ஆசைப்பட்டு, தங்களது வீட்டின் உள்விவரங்களையும், குடும்ப உறுப்பினர்களின் அன்றாட நடவடிக்கைகளையும் கேமரா மூலம் வெளி நிறுவனங்களுக்குப் பதிவு செய்து அனுப்புவது, பிற்காலத்தில் மிகப்பெரிய சைபர் குற்றங்களுக்கு வழிவகுக்கும் என்று அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

வீட்டின் படுக்கையறை, சமையலறை உள்ளிட்ட தனிப்பட்ட இடங்கள் மற்றும் பெண்களின் அந்தரங்கத் தரவுகள் தவறான நபர்களின் கைகளுக்குச் சென்றால், அது பிளாக்மெயில் மற்றும் இதர சட்டவிரோதச் செயல்களுக்குப் பயன்படுத்தப்பட வாய்ப்புள்ளது. எனவே, இதுபோன்ற போலியான மற்றும் ஆபத்தான பகுதிநேர வேலைவாய்ப்புகளை நம்பி இல்லத்தரசிகள் தங்களது பாதுகாப்பைத் தொலைத்துவிடக் கூடாது என்று சைபர் க்ரைம் போலீஸாரும் எச்சரித்து வருகின்றனர்.