உத்தரப் பிரதேச மாநிலம் காசியாபாத் அருகே உள்ள கோடா பகுதியில் மின்மாற்றி (டிரான்ஸ்பார்மர்) ஒன்று பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்தின் போது மின்மாற்றியிலிருந்து கொதிக்கும் எண்ணெய் சிதறி அருகிலிருந்தவர்கள் மீது விழுந்ததில், ஐந்து பேர் பலத்த தீக்காயமடைந்தனர்.
மேலும் சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் இந்த விபத்து தொடர்பான வீடியோவில், இளைஞர் ஒருவரின் ஆடையில் தீப்பிடித்து எரிய, அவர் உயிருக்கு பயந்து அலறியபடி சாலையில் ஓடுவதைக் காண முடிகிறது. பின்னர் அங்கிருந்த ஒரு சாக்கடை கால்வாயில் குதித்து அவர் தனது உயிரைக் காப்பாற்றிக் கொண்டார்.
⚠️ Trigger Warning : Disturbing Video⚠️
यूपी | गाजियाबाद में तेज धमाके से ट्रांसफार्मर फटा, शरीर में आग लगने पर एक शख्स भागता नजर आया !! pic.twitter.com/dXOixyO79S
— Sachin Gupta (@SachinGuptaUP) January 17, 2026
“>
இந்த கோர விபத்தில் கமலேஷ் சவுத்ரி, அபினவ், அஜித், அனில் மற்றும் கமல் ஆகிய ஐந்து பேர் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். மின்சாரத் திருட்டைத் தடுப்பதற்காகப் பொருத்தப்பட்டிருந்த கருவியில் ஏற்பட்ட உள்நிலைக் கோளாறு காரணமாகவே இந்த வெடிப்புச் சம்பவம் நிகழ்ந்ததாக மின்சாரத் துறை அதிகாரிகள் முதற்கட்ட விசாரணையில் தெரிவித்துள்ளனர்.
இருப்பினும், தகவல் தெரிவித்தும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வருவதற்கு ஒரு மணி நேரத்திற்கும் மேலாக தாமதமானது என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். தற்போது காவல்துறையினர் மற்றும் மின்சார வாரிய அதிகாரிகள் இந்த விபத்து குறித்து விரிவான விசாரணை நடத்தி வருகின்றனர்.
