தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அதிமுக தலைமையிலான என்டிஏ கூட்டணியில் டிடிவி தினகரனின் அமமுக இணைவது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது. டெல்லியில் அமித்ஷாவை சந்தித்த பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டதாகத் தெரிகிறது.
ஜனவரி 23-ம் தேதி மதுராந்தகத்தில் நடைபெறவுள்ள என்டிஏ கூட்டணி மாநாட்டிற்கான வரவேற்பு பேனர்களில் டிடிவி தினகரனின் புகைப்படம் இடம்பெற்றிருப்பது, அவர் எடப்பாடி பழனிசாமியை முதல்வர் வேட்பாளராக ஏற்றுக்கொண்டதை உறுதிப்படுத்துவதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தொகுதிப் பங்கீட்டைப் பொறுத்தவரை, அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு மொத்தம் 56 தொகுதிகள் ஒதுக்கப்பட வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. இந்தத் தொகுதிகளுக்குள்ளேயே அமமுக, தமாகா, புதிய நீதிக் கட்சி உள்ளிட்ட மற்ற கூட்டணிக் கட்சிகளுக்கான இடங்களைப் பகிர்ந்து கொள்ள பாஜக திட்டமிட்டுள்ளது.
இதில் அமமுக தரப்பில் இரட்டை இலக்க தொகுதிகள் கேட்கப்பட்டாலும், இறுதியாக 8 முதல் 9 தொகுதிகள் வரை ஒதுக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே இந்தக் கூட்டணியில் பாமக 17 தொகுதிகளுடன் களம் இறங்கியுள்ள நிலையில், தற்போது டிடிவி தினகரனின் வருகை கூட்டணியை மேலும் வலுப்படுத்தியுள்ளது.
விரைவில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் எனத் தெரிகிறது. தேமுதிக போன்ற மற்ற கட்சிகளும் இந்தக் கூட்டணியில் இணையுமா என்ற எதிர்பார்ப்பு தற்போது அதிகரித்துள்ளது.
