தமிழகத்தில் சட்டசபைத் தேர்தல் நெருங்கும் சூழலில், தவெக தலைவர் விஜய்யின் ‘ஜனநாயகன்’ படத்தை தான் பார்க்கப் போவதில்லை என்று காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம் அதிரடியாகத் தெரிவித்துள்ளார்.
சினிமாவுக்கும் அரசியலுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று கூறிய அவர், ‘ஜனநாயகன்’ பட விவகாரத்தில் விஜய் மௌனம் காப்பதையும், கரூர் விவகாரத்தில் விஜய்யிடம் சிபிஐ விசாரணை நடத்துவது ஒரு வழக்கமான நடைமுறைதான் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், பிரதமர் மோடியின் தமிழக வருகையை கிண்டல் செய்த அவர், தேர்தல் நேரத்தில் மட்டும் மோடி தமிழ் கலாச்சாரம் பற்றிப் பேசுவது வழக்கம் என்று விமர்சித்துள்ளார்.
திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு ஆட்சியில் பங்கு வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வரும் நிலையில், இது அரசியல் கட்சிகளின் இயல்பான எதிர்பார்ப்புதான் என்று கார்த்தி சிதம்பரம் விளக்கமளித்துள்ளார்.
‘ஜனநாயகன்’ படத்திற்கு காங்கிரஸ் நிர்வாகிகள் பலரும் ஆதரவு தெரிவித்தும் விஜய் தரப்பிலிருந்து அதற்கு எந்த எதிர்வினையும் வராத சூழலில், கார்த்தி சிதம்பரத்தின் இந்த கருத்து அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது.
அதேசமயம், தற்போதைய நிலையில் திமுக கூட்டணியில் நீடிப்பதாகவும், அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தைகள் திமுகவுடன் மட்டுமே நடப்பதாகவும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.
