சென்னை பல்லாவரம் அருகே, தவறான உறவால் ஏற்பட்ட மோதலால் இளைஞர் ஒருவர் இளம்பெண்களால் திட்டமிட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திரிசூலம் பகுதியைச் சேர்ந்த செல்வக்குமார் (22) என்பவருக்கும், ரீனா என்ற பெண்ணுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்த சூழலில், ரீனாவின் தோழியான ரஜிதா என்பவருடனும் செல்வக்குமார் பழகி வந்துள்ளார். ஒருகட்டத்தில் இரு பெண்களையும் தனிமையில் இருக்கச் சொல்லி செல்வக்குமார் அடிக்கடி வற்புறுத்தி வந்ததாகவும், உடல் ரீதியாகத் தொல்லை கொடுத்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

செல்வக்குமாரின் இந்தத் தொந்தரவால் ஆத்திரமடைந்த ரீனாவும் ரஜிதாவும், அவரைத் தீர்த்துக்கட்ட முடிவு செய்தனர். அதன்படி, கடந்த புதன்கிழமை இரவு ஆசை வார்த்தை கூறி செல்வக்குமாரை பழைய பல்லாவரம் பகுதிக்கு வரவழைத்துள்ளனர்.

அங்கு ஏற்கனவே தயாராக இருந்த தங்களது ஆண் நண்பர்கள் நான்கு பேருடன் சேர்ந்து, செல்வக்குமாரை சுற்றி வளைத்து பயங்கர ஆயுதங்களால் சரமாரியாக வெட்டியுள்ளனர். இதில் படுகாயமடைந்த செல்வக்குமார், மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

கொலைக்குப் பிறகு போலீசாரை ஏமாற்ற, வழிப்பறி திருடர்கள் தாக்கியது போல ரீனா மயங்கி விழுந்து நாடகமாடியுள்ளார். இருப்பினும், போலீசாரின் தீவிர விசாரணையில் உண்மை வெளிச்சத்திற்கு வந்தது.

தலைமறைவாக இருந்த ரீனா, ரஜிதா மற்றும் அவர்களுக்கு உதவிய 17 வயது சிறுவன் ஆகிய மூவரையும் போலீசார் கைது செய்தனர்.

இன்ஸ்டாகிராம் மூலம் பழகி ஆண்களிடம் பணம் பறிப்பது மற்றும் இந்த கொடூரக் கொலைச் சம்பவம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.