தமிழகத்தில் விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் கூட்டணி மற்றும் தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தைகளைத் தொடங்கியுள்ளன.

இந்நிலையில், சென்னை வந்த காங்கிரஸ் மூத்த தலைவர் சச்சின் பைலட் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, தமிழகத்தில் திமுக அரசு மிகச்சிறப்பாகச் செயல்பட்டு வருவதாகவும், அதன் திட்டங்கள் மக்களைப் பெரிதும் கவர்ந்துள்ளதாகவும் அவர் பாராட்டு தெரிவித்தார்.

மேலும், தமிழக அரசியலில் பாஜக மற்றும் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஒருபோதும் கால் ஊன்ற முடியாது என்றும் அவர் உறுதிபடக் கூறினார். திமுக கூட்டணியில் காங்கிரஸ் நீடிக்கும் அதே வேளையில், ஆட்சி அதிகாரத்தில் பங்கு கேட்பது குறித்து எழுந்துள்ள விவாதங்களுக்கும் அவர் பதிலளித்தார்.

மக்கள் சேவை செய்ய வேண்டும் என்ற நோக்கில் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் பங்கு கேட்பதில் எந்தத் தவறும் இல்லை என்றும், ஒவ்வொரு அரசியல் கட்சியும் பிரதிநிதித்துவத்தை விரும்புவது இயல்புதான் என்றும் அவர் குறிப்பிட்டார்.

திமுக அரசின் செயல்பாடுகளைப் பாராட்டிய அதே வேளையில், காங்கிரஸின் அரசியல் விருப்பத்தையும் அவர் வெளிப்படையாகப் பதிவு செய்துள்ளார்.