தமிழகத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தங்களது தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றன.

பிரதான கூட்டணிகளான திமுக மற்றும் அதிமுக தங்களது வியூகங்களை அமைத்து வரும் வேளையில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தனது கட்சியின் பலத்தை நிரூபிக்கத் தயாராகி வருகிறார்.

மற்ற கட்சிகள் தங்களது கூட்டணி குறித்து இன்னும் இறுதி முடிவெடுக்காத நிலையில், விஜய் தரப்பு கூட்டணிப் பேச்சுவார்த்தைகளை ஒருபுறம் முன்னெடுத்துக் கொண்டே, தேர்தல் பணிகளை அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியுள்ளது.

இதன் ஒரு பகுதியாக, தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் 10 பேர் கொண்ட தேர்தல் பிரசாரக் குழுவை விஜய் அறிவித்துள்ளார். இந்தக் குழுவில் ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, செங்கோட்டையன் உள்ளிட்ட 10 முக்கிய நிர்வாகிகள் இடம்பெற்றுள்ளனர்.

தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் ஆலோசனைக் கூட்டங்கள் மற்றும் பிரசாரக் கூட்டங்களை ஒருங்கிணைக்கும் பொறுப்பு இந்தக் குழுவிற்கு வழங்கப்பட்டுள்ளது.

தங்களது கட்சியின் கொள்கைகளையும் திட்டங்களையும் மக்களிடம் கொண்டு சேர்க்க இந்தக் குழுவினருக்குத் தொண்டர்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று விஜய் தனது அறிக்கையில் கேட்டுக் கொண்டுள்ளார்.