தமிழ்நாட்டில் ஒப்பந்த அடிப்படையில் கோழி வளர்ப்பில் ஈடுபட்டுள்ள 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பண்ணையாளர்கள் மற்றும் 5 லட்சம் தொழிலாளர்கள் தங்களின் வாழ்வாதாரத்திற்காகத் தொடர்ந்து போராடி வருகின்றனர்.

தற்போதைய சூழலில் மின் கட்டணம், தீவனம் மற்றும் ஆள் கூலி எனப் பராமரிப்புச் செலவுகள் பல மடங்கு உயர்ந்துள்ள நிலையில், நிறுவனங்கள் வழங்கும் ஒரு கிலோவுக்கு 6.50 ரூபாய் என்ற வளர்ப்பு கூலி போதுமானதாக இல்லை.

இதனால், ஒரு கிலோவுக்கு 20 ரூபாய் அடிப்படை கூலியாக வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த ஆறு மாதங்களாக அவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

கடந்த ஜனவரி 1-ஆம் தேதி முதல் உற்பத்தியை நிறுத்திப் போராடப்போவதாகப் பண்ணையாளர்கள் முன்னரே அறிவித்திருந்த நிலையில், இது தொடர்பாக ஜனவரி 21-ஆம் தேதி முத்தரப்புப் பேச்சுவார்த்தை நடைபெறும் என்று அரசு தரப்பில் உறுதியளிக்கப்பட்டது.

இருப்பினும், தங்கள் உரிமைகளுக்காக அறவழியில் போராடிய விவசாய சங்கத் தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் உள்ளிட்ட 10 பேரைத் தமிழகக் காவல்துறை கைது செய்து சிறையில் அடைத்துள்ளது. இந்த நடவடிக்கை விவசாயிகளிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

 

இந்தக் கைது நடவடிக்கைக்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். விலைவாசி உயர்வால் பாதிக்கப்பட்டுள்ள பண்ணையாளர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றாமல், அவர்களைக் கைது செய்வது முறையல்ல என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே, சிறையில் உள்ள விவசாயிகளை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்றும், அரசு தலையிட்டு நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி விவசாயிகளுக்கு உரியக் கூலி உயர்வை பெற்றுத்தர வேண்டும் என்றும் அவர் தமிழக அரசை வலியுறுத்தியுள்ளார்.