2026 தமிழக சட்டசபை தேர்தல் களம் இப்போதே அனல் பறக்கத் தொடங்கிவிட்டது. ஆளும் திமுக மற்றும் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்திற்கு (தவெக) சவால் விடும் வகையில், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இது தொடர்பாகத் தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளர் பியூஷ் கோயல் அதிரடி தகவலை வெளியிட்டுள்ளார்.
மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் அளித்த பேட்டியில், “NDA கூட்டணியில் உள்ள தோழமைக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை சுமூகமாக முடிந்துவிட்டது. வரும் ஜனவரி 23-ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி சென்னை வருகிறார்.
அவர் பங்கேற்கும் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில், கூட்டணியில் எந்தெந்தக் கட்சிக்கு எத்தனை இடங்கள் என்பது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும்” என்று கூறியுள்ளார்.
இந்தக் கூட்டணியில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக, பாஜக, அன்புமணி ராமதாஸின் பாமக உள்ளிட்ட கட்சிகள் கைகோர்த்துள்ளன.
மேலும், புதிய கட்சிகள் யாராவது இணைய விரும்பினால், அவர்களை வரவேற்கக் கதவுகள் திறந்தே இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதனால், அதிமுக – பாஜக கூட்டணி உறுதி செய்யப்பட்டுள்ளதுடன், ஜனவரி 23-ல் மோடி முன்னிலையில் மெகா கூட்டணி அறிவிப்பை வெளியிட பாஜக மற்றும் அதிமுகவினர் படுவேகமாகத் தயாராகி வருகின்றனர்.
