கடலூர் மாவட்டம் விருத்தாச்சலத்தில் மனிதநேயத்தைப் பறைசாற்றும் நெகிழ்ச்சியான சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது. கடந்த ஜனவரி 6-ம் தேதி, பெரியார் நகரில் உள்ள ஒரு கடையில் பெண் ஒருவர் தனது ஒன்றரை வயது குழந்தையுடன் டீ குடித்துக்கொண்டிருந்தார்.

அப்போது எதிர்பாராத விதமாக அந்தச் சிறு குழந்தை திடீரென மயங்கி விழுந்து, மூச்சுப் பேச்சில்லாமல் போனது. பதறிப்போன அந்தத் தாய் அலறிக் துடித்தார்.

சுற்றி இருந்தவர்கள் செய்வதறியாது வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த அந்த இக்கட்டான நேரத்தில், அங்கு டீ குடிக்க வந்த விருத்தாச்சலம் காவல் நிலைய தலைமை காவலர் சரவணன் ‘தேவதூதனாக’ வந்து நின்றார்.

நிலைமையைப் பார்த்த சரவணன், ஒரு வினாடி கூட யோசிக்காமல் குழந்தையைத் தூக்கிக்கொண்டு சுமார் அரை கிலோமீட்டர் தூரத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு மின்னல் வேகத்தில் ஓடினார்.

அங்கு மருத்துவர்கள் அளித்த உடனடி முதலுதவியால் குழந்தையின் மூச்சு மீண்டது. காவலர் சரவணனின் இந்த மனிதாபிமானச் செயலைப் பார்த்த பொதுமக்கள் நெகிழ்ந்து போயினர்.

இந்தச் சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி வைரலான நிலையில், கடலூர் மாவட்ட எஸ்.பி ஜெயக்குமார் ஐபிஎஸ், தலைமை காவலர் சரவணனை நேரில் அழைத்து வெகுவாகப் பாராட்டி கௌரவித்தார். “காக்கிச் சட்டையின் பின்னால் ஒரு ஈரமான இதயம் இருப்பதை” இந்தச் சம்பவம் மீண்டும் நிரூபித்துள்ளது.