பிரபல யூடியூபர் பாயல் கேமிங்கின் பெயரில் போலியான ஆபாச வீடியோவை சமூக வலைதளங்களில் பரப்பிய விவகாரத்தில், மகாராஷ்டிரா சைபர் போலீசார் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளனர். கடந்த மாதம் பாயல் கேமிங் போன்ற தோற்றம் கொண்ட ஒரு பெண்ணின் வீடியோ இணையத்தில் வைரலான நிலையில், அது செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்ட போலியான ‘டீப்ஃபேக்’ வீடியோ என்பது உறுதி செய்யப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, அந்த வீடியோவை பதிவேற்றிய மற்றும் பகிர்ந்த பல இளைஞர்களை போலீசார் அடையாளம் கண்டு கைது செய்துள்ளனர். மேலும், கைதான இளைஞர்கள் தங்கள் செயலுக்காக பகிரங்கமாக மன்னிப்பு கேட்கும் வீடியோக்களையும் காவல் துறை வெளியிட்டுள்ளது.

“>

இந்த விவகாரத்தில் முதல்முறையாக வீடியோவைப் பகிர்ந்த நபர்களைத் தேடி வரும் போலீசார், தொழில்நுட்பத்தைத் தவறாகப் பயன்படுத்துபவர்களுக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளனர். கைதானவர்களில் ஒருவரான அபிஷேக் ஜாதவ் என்பவர், தான் அந்த வீடியோவின் உண்மைத்தன்மையை ஆராயாமல் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்ததற்காக வருத்தம் தெரிவித்துள்ளார்.

இத்தகைய சைபர் குற்றங்கள் ஒருவரின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிப்பதாகக் கூறியுள்ள போலீசார், பொதுமக்கள் சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல்களைச் சரிபார்க்காமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என்று அறிவுறுத்தியுள்ளனர். பாயல் கேமிங் ஏற்கனவே இது தொடர்பாக சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.