குர்கான் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடும் குளிர் அலை வீசி வரும் நிலையில், நகரின் வெளிப்பகுதிகளில் வெப்பநிலை மைனஸ் 1 டிகிரி செல்சியஸாகக் குறைந்து உறைய வைக்கும் குளிர் நிலவுகிறது. இது தொடர்பான வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில், திறந்தவெளி நிலங்கள், புல்வெளிகள் மற்றும் வேலிகள் மீது பனிப்படலம் வெள்ளை நிறப் போர்வை போலப் படர்ந்திருப்பதைக் காண முடிகிறது. ஒரு நபர் தெர்மோமீட்டர் மூலம் அங்குள்ள உறைநிலையை நேரலையாகக் காண்பிப்பது பொதுமக்களிடையே பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

“>

மேலும் தலைநகர் டெல்லி மற்றும் அதனைச் சுற்றியுள்ள என்.சி.ஆர் பகுதிகளில் நிலவும் இந்த அதீத குளிரால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. காற்றில் உள்ள ஈரப்பதம் கடும் குளிரால் உறைந்து பனித்துளிகளாக மாறியுள்ளதாக வானிலை ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

டெல்லியின் அயன்நகர் மற்றும் பாலம் போன்ற இடங்களிலும் வெப்பநிலை 3 டிகிரிக்கும் கீழ் குறைந்துள்ள நிலையில், வரும் நாட்களில் குளிரின் தாக்கம் மேலும் தொடரக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. சமூக வலைதளங்களில் பலரும் தங்கள் பகுதியில் நிலவும் உறைபனி புகைப்படங்களைப் பகிர்ந்து இந்த கடுமையான காலநிலை மாற்றத்தைக் குறித்து கவலை தெரிவித்து வருகின்றனர்.