உ.பி. மாநிலம் எட்டா மாவட்டத்தில் உள்ள ஜைத்ரா பகுதியில், 19 வயது இளம் பெண் சிவகாமியும் (பெயர் மாற்றப்பட்டுள்ளது), 24 வயது வாலிபர் தீபக்கும் கடந்த 3 ஆண்டுகளாகக் காதலித்து வந்தனர்.

இவர்களது காதலுக்குப் பெண் வீட்டார் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு தீபக் தனது காதலியைக் காண அவர் வீட்டுக்குச் சென்றுள்ளார்.

அப்போது இருவரையும் ஒன்றாகப் பார்த்த பெண்ணின் தந்தை மற்றும் சகோதரர்கள் ஆத்திரத்தில் அறிவுக்கண்ணை இழந்துள்ளனர். ஊரே வேடிக்கை பார்க்க, இருவரையும் தடியால் அடித்துத் துவைத்துள்ளனர். அத்துடன் நில்லாமல், முதலில் பெண்ணின் கழுத்தை அறுத்தவர்கள், பின்னர் வாலிபரின் கழுத்தையும் அறுத்துக் கொடூரமாகக் கொலை செய்துள்ளனர்.

பின்னர் இருவரது உடல்களையும் மாடியிலிருந்து வீசியுள்ளனர். “கௌரவம்” என்ற பெயரில் சொந்த மகளையே காவு வாங்கிய இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

தகவலறிந்து வந்த போலீஸார் பெண்ணின் தந்தையைக் கைது செய்துள்ளனர்; தப்பியோடிய சகோதரர்களைத் தேடி வருகின்றனர். இந்த ‘ஆனர் கில்லிங்’ (Honor Killing) விவகாரம் மீண்டும் ஒருமுறை சமூகத்தின் இருண்ட பக்கத்தை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது.