ராஜஸ்தான் மாநிலத்தில் பள்ளி மாணவி ஒருவர் ஓடும் காரில் கடத்தப்பட்டு கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட அதிர்ச்சிகரமான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிகானேர் மாவட்டத்தில் 12-ஆம் வகுப்பு பயிலும் அந்த மாணவி, பள்ளிக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது மர்ம நபர்களால் வலுக்கட்டாயமாக காரில் கடத்தப்பட்டுள்ளார்.

மேலும் ஆள்நடமாட்டம் இல்லாத இடத்திற்கு காரை ஓட்டிச் சென்ற கும்பல், மாணவியை ஓடும் காரிலேயே கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாகப் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கொடூரச் செயலுக்குப் பிறகு, பாதிக்கப்பட்ட சிறுமியை வெறிச்சோடிய ஒரு பகுதியில் இறக்கிவிட்டு குற்றவாளிகள் தப்பிச் சென்றுள்ளனர்.

இச்சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட மாணவியின் குடும்பத்தினர் அளித்த புகாரின் அடிப்படையில், பிகானேர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பாதிக்கப்பட்ட மாணவி தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைப் பெற்று வருகிறார்.

இந்நிலையில் குற்றவாளிகளை அடையாளம் காண அந்தப் பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளைப் போலீஸார் ஆய்வு செய்து வருவதோடு, தேடுதல் வேட்டையையும் முடுக்கிவிட்டுள்ளனர். ராஜஸ்தானில் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான இத்தகைய வன்முறைகள் அதிகரித்து வருவது பொதுமக்களிடையே பெரும் அச்சத்தையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.