சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் உள்ள அரசுப் பள்ளியில் 4-ம் வகுப்பு மாணவர்களுக்கான ஆங்கில அரையாண்டுத் தேர்வு வினாத்தாள் தயாரிக்கப்பட்டது.
அதில், “மோனாவின் நாயின் பெயர் என்ன?” என்ற கேள்விக்கு ஆப்ஷன்களாக பாலா, ஷேரு, ராம் மற்றும் ஏதுமில்லை என கொடுக்கப்பட்டிருந்தது.
புனிதமான பெயராகக் கருதப்படும் ‘ராம்’ என்பதை நாயின் பெயருக்கான ஆப்ஷனில் சேர்த்ததைக் கண்ட இந்து அமைப்புகள் கொந்தளித்தன. விஸ்வ இந்து பரிஷத் மற்றும் பஜ்ரங் தளம் உள்ளிட்ட அமைப்புகள் மாநிலம் தழுவிய போராட்டங்களில் குதித்தன.
நிலைமை மோசமானதை அடுத்து, கல்வித் துறை அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளனர். இந்த வினாத்தாளைத் தயாரித்த நக்டி கிராம அரசுப் பள்ளித் தலைமை ஆசிரியை ஷிகா சோனி சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
மேலும், வினாத்தாளைச் சரிபார்த்த ஒப்பந்த ஆசிரியை நம்ரதா வர்மா பணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். “நாங்கள் ‘ராமு’ (Ramu) என்றுதான் டைப் செய்ய நினைத்தோம்,
தெரியாமல் ‘U’ விடுபட்டுவிட்டது” என்று ஆசிரியைகள் விளக்கம் அளித்தும், மத உணர்வுகளைப் புண்படுத்தியதாகக் கூறி அவர்கள் மீது நடவடிக்கை பாய்ந்துள்ளது. ஒரு சிறிய எழுத்துப் பிழை இருவரின் வேலையையே பறித்துள்ள சம்பவம் ராய்ப்பூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
