திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறில் நடைபெற்ற விழாவில், பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த சுமார் 2,500 பேர் அமைச்சர் எ.வ.வேலு முன்னிலையில் திமுகவில் இணைந்தனர். இந்த நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர், “இப்போதெல்லாம் கட்சி ஆரம்பித்த மறுநாளே நாற்காலி போட்டுக்கொண்டு, தங்களை ‘நாளைய முதல்வர்’ என சமூக வலைதளங்களில் விளம்பரம் செய்து கொள்கிறார்கள்” என்று மறைமுகமாகப் புதிய அரசியல் வருகைகளைக் கலாய்த்தார்.

திமுக என்பது அப்படிப்பட்ட இயக்கம் அல்ல என்றும், சாதாரண எளிய மக்களின் முன்னேற்றத்திற்காக உருவாக்கப்பட்ட இயக்கம் என்றும் அவர் பெருமிதத்துடன் குறிப்பிட்டார். திமுக ஆட்சிக்கு வரும்போதெல்லாம் தொழிலாளர்கள், விவசாயிகள் மற்றும் பின்தங்கிய மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் வகையில் திட்டங்கள் தீட்டப்படுவதாக அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார்.

திமுகவே‌ தமிழகத்தின் “தாய்க் கழகம்” என்று குறிப்பிட்ட அவர், மாற்றுக்கட்சியிலிருந்து விலகித் தாய் கழகத்தில் இணைந்தவர்களை அன்போடு வரவேற்பதாகக் கூறினார். சமூக நீதி மற்றும் மக்கள் நலனை முன்னிறுத்திச் செயல்படும் இந்த இயக்கத்தில் இணைந்திருப்பதை மக்கள் பெருமையாகக் கருத வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.