மத்தியப் பிரதேசத்தில் மாட்டுச் சாணம் மற்றும் சிறுநீரைப் பயன்படுத்தி புற்றுநோய் சிகிச்சை மருந்து தயாரிக்கும் அரசு நிதியுதவி பெற்ற ஆய்வுத் திட்டத்தில், பெரும் நிதி முறைகேடுகள் நடந்துள்ளதாக எழுந்துள்ள புகார் அம்மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜபல்பூரில் உள்ள நானாஜி தேஷ்முக் கால்நடை அறிவியல் பல்கலைக்கழகத்தில் கடந்த 2011-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த ஆய்வுத் திட்டத்திற்கு, மாநில அரசு சுமார் 3.5 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்தது.
புற்றுநோய் போன்ற தீவிர நோய்களுக்குப் பாரம்பரிய முறையில் சிகிச்சை கண்டறிவதே இத்திட்டத்தின் நோக்கம் என்றாலும், கடந்த பத்து ஆண்டுகளாக இதில் முறையான அறிவியல் முடிவுகள் எட்டப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்தத் திட்டம் தொடர்பாகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள விசாரணை அறிக்கையில், நிதி மேலாண்மையில் பல்வேறு சந்தேகத்திற்குரிய செலவுகள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.
குறிப்பாக, 2011 முதல் 2018 வரையிலான காலக்கட்டத்தில் மாட்டுச் சாணம், சிறுநீர் மற்றும் சேமிப்பு பாத்திரங்கள் போன்ற அடிப்படைத் தேவைகளுக்காகச் சுமார் 1.92 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளதாகக் கணக்குக் காட்டப்பட்டுள்ளது. ஆனால், சந்தை நிலவரப்படி இதற்கான செலவு வெறும் 15 முதல் 20 லட்சம் ரூபாய் மட்டுமே இருக்க வாய்ப்புள்ளதாக விசாரணைக் குழு தெரிவித்துள்ளது.
இதுமட்டுமின்றி, தேவையற்ற விமானப் பயணங்கள் மற்றும் வாகன பராமரிப்புக்காக லட்சக்கணக்கில் நிதி செலவிடப்பட்டிருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து விளக்கம் அளித்துள்ள கூடுதல் மாவட்ட ஆட்சியர் ராகு வர்மா ரவி, விவசாயிகளுக்குப் பயிற்சி அளிப்பது இத்திட்டத்தின் ஒரு பகுதி என்று கூறப்பட்டாலும், அது குறித்த முறையான ஆவணங்கள் எவையும் இல்லை என்று தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த ஆய்வுத் திட்டத்தின் அறிவியல் செயல்திறன் குறித்தும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். திட்டத்திற்காக வாங்கப்பட்ட வாகனங்கள் மற்றும் எரிபொருள் செலவினங்கள் ஆய்வுக்குத் தொடர்பில்லாத வகையில் அமைந்துள்ளதாகவும், இது தொடர்பாக விரிவான விசாரணை அறிக்கை தற்போது மாவட்ட ஆட்சியரிடம் சமர்ப்பிக்கப்பட்டு, அடுத்தகட்ட நடவடிக்கைக்காகப் பிரிவு ஆணையருக்கு அனுப்பப்பட உள்ளதாகவும் அவர் கூறினார்.
மறுபுறம், இந்த முறைகேடு புகார்களைப் பல்கலைக்கழக நிர்வாகம் முற்றிலுமாக மறுத்துள்ளது. பல்கலைக்கழகப் பதிவாளர் டாக்டர் எஸ்.எஸ். தோமர் இது குறித்துக் கூறுகையில், திட்டத்தின் ஒவ்வொரு கட்டமும் அரசின் விதிமுறைகளைப் பின்பற்றியே செயல்படுத்தப்பட்டதாகவும், அனைத்துக் கொள்முதல்களும் டெண்டர் முறையிலேயே நடைபெற்றதாகவும் விளக்கமளித்தார்.
தணிக்கை குழுவின் ஆய்விற்குத் தேவையான அனைத்து ஆவணங்களும் தகுந்த சான்றிதழ்களுடன் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும், எவ்விதத் தகவலும் மறைக்கப்படவில்லை என்றும் அவர் உறுதியளித்தார். இத்திட்டத்தின் மூலம் இன்றும் விவசாயிகள் மற்றும் இளைஞர்களுக்குப் பயிற்சிகள் வழங்கப்பட்டு வருவதாக அவர் தனது நிலைப்பாட்டைத் தெரிவித்துள்ளார்.
