தமிழக முதல்வர் ஸ்டாலின் பங்கேற்ற ‘உங்க கனவு சொல்லுங்க’ என்ற நிகழ்ச்சியில், அரசுத் திட்டங்களால் பயனடைந்த ஒரு பெண்ணின் வெளிப்படையான கோரிக்கை பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது. மேடையில் பேசிய அந்தப் பெண், மகளிருக்கான இலவசப் பேருந்துப் பயணம் மற்றும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை போன்ற திட்டங்களால் தான் பெரிதும் பயனடைந்துள்ளதாக உருக்கமாகத் தெரிவித்தார். ஆனால், தனது அடுத்தகட்ட முன்னேற்றத்திற்காகத் தொழில் தொடங்க கடன் உதவி தேவைப்படுவதாகவும், அதற்குக் கடனுதவி பெற்றுத் தருமாறு முதல்வரிடம் நேரடி வேண்டுகோளை முன்வைத்தார்.

​இதற்குப் பதில் அளித்த முதல்வர் ஸ்டாலின், “மகளிர் சுயஉதவிக் குழுக்கள் மூலம் மானியத்துடன் கடன் கிடைக்கிறதே?” என்று கேட்க, அந்தப் பெண் ஒரு முக்கியமான நடைமுறைச் சிக்கலைச் சுட்டிக்காட்டினார். தற்போது குறிப்பிட்ட பிரிவினருக்கு (SC/ST) மட்டுமே மானியத்துடன் கடன் கிடைப்பதாகவும், ஜாதி பாகுபாடின்றி அனைத்துப் பெண்களுக்கும் மானியத்துடன் கூடிய லோன் கிடைக்க முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தார். இதைக் கேட்ட முதல்வர், நகைச்சுவையாக “எவ்வளவு செய்தாலும் உங்களுக்குப் போதவில்லை” என்று கூறிவிட்டு, பின்னர் அந்தப் பெண்ணின் கோரிக்கையை ஏற்று, நிச்சயமாக அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என மேடையிலேயே உறுதியளித்தார்.