உத்தரப்பிரதேச மாநிலம் மொராதாபாத்தில் உள்ள ஒரு சாலையில் சென்றுகொண்டிருந்த எல்பிஜி கேஸ் டேங்கர் லாரியை, ஒரே நேரத்தில் ஒரு பேருந்தும் இன்னோவா காரும் முந்த முயன்றதால் பரபரப்பான விபத்து ஏற்பட்டது. அந்த டேங்கர் லாரி சாலையின் நடுவே சென்று கொண்டிருந்தபோது, அதன் இடதுபுறமாக பேருந்தும், வலதுபுறமாக இன்னோவா காரும் மிக நெருக்கமாக முந்திச் செல்ல முயன்றன. அப்போது பேருந்துக்கு வழிவிடுவதற்காக லாரி ஓட்டுநர் வாகனத்தை வலதுபுறம் திருப்பியபோது, எதிர்பாராத விதமாக இன்னோவா கார் மீது லாரி மோதியது. இதில் கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையின் நடுவே இருந்த தடுப்புச் சுவரில் (Divider) ஏறி இறங்கி பெரும் சேதமடைந்தது.
இந்த விபத்து தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. “பெரிய வாகனங்களை முந்திச் செல்லும்போது போதிய இடைவெளி விட வேண்டும், அவசரப்பட்டு முந்துவது ஆபத்து” என ஒரு தரப்பினர் கார் ஓட்டுநரைச் சாடுகின்றனர். மற்றொரு தரப்பினரோ, “கேஸ் டேங்கர் போன்ற அபாயகரமான வாகனத்தை ஓட்டும்போது லாரி ஓட்டுநர் இன்னும் கவனமாக இருந்திருக்க வேண்டும்” எனக் கூறுகின்றனர். அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் யாருக்கும் பெரிய காயம் ஏற்படவில்லை என்றாலும், சாலையில் வாகனங்களை ஓட்டும்போது பொறுமையும் நிதானமும் எவ்வளவு அவசியம் என்பதை இந்தச் சம்பவம் உணர்த்துகிறது.
