திண்டிவனம் தைலாபுரத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி அவர்களின் ஆட்சி காலத்தில் பாமக எவ்வித நிபந்தனையுமின்றி ஆதரவு அளித்ததை நினைவு கூர்ந்தார். காங்கிரஸ் கட்சியினர் ஆட்சியில் பங்கு கேட்டு நின்றபோது, பாமக எந்தப் பதவியையும் எதிர்பார்க்காமல் ஐந்து ஆண்டுகள் முழுமையாக கருணாநிதி ஆட்சிக்குத் துணையாக இருந்ததாக அவர் தெரிவித்தார்.

​மேலும், தற்போதைய அரசியல் சூழல் குறித்துப் பேசிய அவர், “முதல்வர் ஸ்டாலின் ஆட்சி நன்றாகத்தான் இருக்கிறது” என்று ஒரு பாராட்டுப் பத்திரத்தையும் வாசித்துள்ளார். ஏற்கனவே அதிமுக கூட்டணியில் பாமக இருப்பதாகக் கூறப்படும் நிலையில், ராமதாஸின் இந்தத் திடீர் பாராட்டு மற்றும் காங்கிரஸுக்கு எதிரான விமர்சனம், வரும் தேர்தலில் பாமகவின் கூட்டணி நிலைப்பாட்டில் ஏதேனும் மாற்றம் இருக்குமோ என்ற பலத்த எதிர்பார்ப்பை அரசியல் நோக்கர்களிடையே ஏற்படுத்தியுள்ளது.