மதுரை மாவட்டம் கருங்காலக்குடியில் செய்தியாளர்களைச் சந்தித்த ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, தமிழகத்தின் அமைதிச் சூழலைக் கெடுக்க முற்படும் சக்திகள் குறித்துக் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். போதையில்லா தமிழகத்தை வலியுறுத்தித் தான் மேற்கொண்டுள்ள நடைபயணத்தின் ஒரு பகுதியாக அவர் பேசுகையில், திராவிடக் கொள்கை என்பது வெறும் அரசியலல்ல, அது அண்ணாதுரை மற்றும் கருணாநிதி ஆகியோரால் ரத்தம் சிந்தி பாதுகாக்கப்பட்ட எக்கு இரும்பு போன்ற கோட்டை என்று வர்ணித்தார்.
தமிழகத்தில் நிலவும் சமய நல்லிணக்கத்தைச் சீர்குலைக்க ஹிந்துத்துவா சக்திகள் பிரிவினைவாதத்தைத் தூண்டி வருவதாகவும், அத்தகைய முயற்சிகள் மக்கள் ஆதரவுடன் முறியடிக்கப்படும் என்றும் அவர் உறுதியளித்தார். திமுக கூட்டணியில் ம.தி.மு.க.வின் நிலைப்பாடு குறித்துத் தெளிவுபடுத்திய வைகோ, தங்கள் கட்சி ஒருபோதும் ஆட்சியில் பங்கோ அல்லது அதிகாரத்தில் பங்கோ கேட்டதில்லை என்று திட்டவட்டமாகக் கூறினார்.
மற்ற கட்சிகள் அதிகாரப் பகிர்வு குறித்து விவாதித்து வரும் வேளையில், ம.தி.மு.க. தப்பித் தவறிக்கூட அத்தகைய கோரிக்கையை முன்வைத்தது கிடையாது என்றும், வருங்காலத்திலும் அத்தகைய எண்ணம் தங்களுக்கு இல்லை என்றும் அவர் தெரிவித்தார். திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும் என்பதே தங்கள் இலக்கு என்றும், தேர்தல் வெற்றிக்காகக் கொள்கை பிடிப்போடு உழைப்போம் என்றும் அவர் தனது பேட்டியின் போது வலியுறுத்தினார்.
