நடிகர் விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் தணிக்கைச் சான்றிதழ் சிக்கலால் இன்று வெளியாகாத நிலையில், அந்தத் தடைகள் நீங்கிப் படம் மாபெரும் வெற்றி பெற வேண்டி கிருஷ்ணகிரி மாவட்டத் தவெகவினர் அதிரடி வேண்டுதலில் ஈடுபட்டுள்ளனர். சூளகிரி அருகே உள்ள குண்டு குறுக்கி கிராமத்தில் உள்ள கங்கம்மா, மாரியம்மா மற்றும் முனீஸ்வரன் கோவில்களில் தவெக மத்திய மாவட்ட இளைஞரணி சார்பில் சிறப்புப் பூஜைகள் நடத்தப்பட்டன. 108 தேங்காய்களை உடைத்தும், கிடா வெட்டியும் தங்களது நேர்த்திக் கடனைத் தொண்டர்கள் செலுத்தினர்.
மேலும், வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் வெற்றி பெற்று, விஜய் தமிழக முதல்வராகப் பொறுப்பேற்க வேண்டும் என்பதே தங்களது பிரதான வேண்டுதல் என அவர்கள் தெரிவித்தனர். இந்த நிகழ்வின் ஒரு பகுதியாக சுமார் 1,000 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டதுடன், விஜய்யின் படத்திற்குப் பாலபிஷேகம் செய்து, திருஷ்டி சுற்றித் தொண்டர்கள் தங்கள் அன்பை வெளிப்படுத்தினர். கட்சியின் கொடியினை ஏற்றி வைக்கப்பட்ட இந்த நிகழ்ச்சியில் ஏராளமான நிர்வாகிகளும் பொதுமக்களும் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.
