தமிழக அரசின் தகவல் தொழில்நுட்பத் துறை, பொதுமக்கள் தங்கள் தேவைகளுக்காக அரசு அலுவலகங்களை நாடிச் செல்வதைக் குறைக்கும் வகையில் ஒரு புரட்சிகரமான திட்டத்தைத் தொடங்கியுள்ளது. இனி பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்கள் உட்பட 50-க்கும் மேற்பட்ட அரசு சேவைகளை வாட்ஸ்அப் (WhatsApp) செயலி மூலமாகவே மிக எளிதாகப் பெற்றுக்கொள்ளலாம். இதற்காகத் தமிழக அரசு மற்றும் மெடா (Meta) நிறுவனம் இடையே நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் அமைச்சர் பி.டி.ஆர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

​பொதுமக்கள் தங்களுக்குத் தேவையான சான்றிதழ்களைப் பெற 7845252525 என்ற வாட்ஸ்அப் எண்ணிற்கு ஒரு குறுஞ்செய்தி அனுப்பினால் போதும். தேவையான ஆவணங்களைப் பதிவேற்றம் செய்த சில நாட்களிலேயே, சான்றிதழ்கள் வாட்ஸ்அப் வழியாகவே விண்ணப்பதாரர்களுக்கு அனுப்பி வைக்கப்படும். இந்த புதிய முயற்சியால் பொதுமக்களின் அலைச்சல் குறையும் என்பதுடன், கால தாமதமின்றி விரைவாக அரசு சேவைகள் மக்களைச் சென்றடையும் என மெடா நிறுவனத்தின் இந்தியத் தலைவர் அருண் ஸ்ரீனிவாஸ் தெரிவித்துள்ளார்.