தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் அவர்கள் மீது விடுதலைச் சிறுத்தைகள் கட்சி எம்.எல்.ஏ. ஆளூர் ஷா நவாஸ் முன்வைத்துள்ள விமர்சனங்கள் தற்போது சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன. நடிகர் விஜய்யின் இரட்டை நிலைப்பாட்டைச் சாடும் வகையில் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள ஷா நவாஸ், விஜய் அவர்கள் கிறிஸ்துமஸ் கேக் வெட்டுவார்.
ஆனால் கிறிஸ்தவர்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்களைக் கண்டிக்க மாட்டார் என்றும், இப்தார் நோன்புக் கஞ்சியைப் பருகுவார், ஆனால் திருப்பரங்குன்றம் தர்கா குறிவைக்கப்படுவதைப் பற்றி வாய் திறக்க மாட்டார் என்றும் கடுமையாகச் சாடியுள்ளார். மேலும், காங்கிரஸ் கூட்டணியை விரும்பும் விஜய், 100 நாள் வேலைத் திட்டத்தில் காந்தி பெயர் நீக்கப்பட்டதை எதிர்க்கவில்லை என்பதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
முக்கியமாக, கரூரில் மாநில அரசு தன்னைத் தொடாத போதும் “ஏ திமுக அரசே!” என்று கொதித்தெழுந்த விஜய், ‘ஜனநாயகன்’ திரைப்படத் தணிக்கை விவகாரத்தில் சென்சார் போர்டு மூலம் சிக்கல் வந்தபோது, மத்திய பாஜக எதிர்த்து ஒரு வார்த்தை கூடப் பேசவில்லை என்று ஷா நவாஸ் குற்றம் சாட்டியுள்ளார்.
ஜனநாயகத்திற்குப் பாதிப்பு ஏற்படும் போதெல்லாம் விஜய் மௌனம் காப்பதாகவும் ஆனால் தமிழக அரசை மட்டும் குறிவைத்து விமர்சிப்பதாகவும் அவர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார். இந்த விமர்சனத்திற்குப் பின்னால் சிலர் விஜய்க்காகப் பரிந்து பேசுவதைச் சுட்டிக்காட்டி “பொங்கலோ பொங்கல்!” என அவர் கிண்டலாகப் பதிவிட்டுள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
