தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமையில், கடலூரில் இன்று (ஜனவரி 9) ‘மக்கள் உரிமை மீட்பு மாநாடு’ மிகப்பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது. மறைந்த கேப்டன் விஜயகாந்த் அவர்களுக்குப் பிறகு கட்சி நடத்தும் இந்த மிகப்பெரிய மாநாடு, தேமுதிக தொண்டர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. சுமார் 10 ஆண்டுகளுக்குப் பிறகு இவ்வளவு பெரிய அளவில் மாநாடு கூட்டியிருப்பது, தமிழக அரசியலில் தேமுதிகவின் பலத்தைக் காட்டும் முக்கிய நிகழ்வாகப் பார்க்கப்படுகிறது.

​இந்த மாநாட்டில் கட்சியின் பொருளாளர் சுதீஷ் பேசுகையில், வரும் தேர்தலில் தேமுதிக யாருடன் கூட்டணி அமைக்கும் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பை இன்று இரவு 7 மணிக்கு பிரேமலதா விஜயகாந்த் வெளியிடுவார் என்று தெரிவித்துள்ளார். மேலும், “தேமுதிக இடம்பெறும் கூட்டணியே வெற்றி கூட்டணியாக அமையும்” என்று அவர் நம்பிக்கையுடன் கூறியுள்ளார். இதனால் இன்று இரவு வெளியாகப்போகும் அறிவிப்பைத் தமிழக அரசியல் கட்சிகளும், பொதுமக்களும் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்துள்ளனர்.