இந்திய ராணுவத்தில் குறுகிய காலப் பணியான அக்னிவீர் திட்டத்தில் சேரும் இளைஞர்களுக்கு ஒரு அதிர்ச்சியான, அதே சமயம் அதிரடியான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்தின் கீழ் பணியாற்றும் வீரர்கள், தங்களின் 4 ஆண்டுகாலப் பணிக்காலத்தில் திருமணம் செய்துகொள்ளக் கூடாது. வீரர்களின் கவனம் முழுவதும் பயிற்சியிலும், தேசப் பாதுகாப்பிலும் மட்டுமே இருக்க வேண்டும் என்பதற்காக இந்த விதியை ராணுவம் அமல்படுத்தியுள்ளது.
மிக முக்கியமாக, 4 ஆண்டு காலப் பணி முடிந்த பிறகு, தகுதியின் அடிப்படையில் 25 சதவீத வீரர்கள் நிரந்தர ராணுவ வீரர்களாகத் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். அப்படி நிரந்தரப் பணிக்கு விண்ணப்பிக்கும் வீரர்களும் திருமணம் ஆகாதவர்களாகவே இருக்க வேண்டும்.
ஒருவேளை பணிக்காலத்திலோ அல்லது நிரந்தரப் பணிக்கான தேர்வு முடிவுகள் வருவதற்கு இடைப்பட்ட 6 மாத காலத்திலோ யாராவது ரகசியமாகத் திருமணம் செய்துகொண்டால், அவர்கள் பணியில் எவ்வளவு சிறப்பாகச் செயல்பட்டிருந்தாலும் நிரந்தரப் பணிக்குத் தகுதியற்றவர்களாகக் கருதப்படுவார்கள்.
குடும்பப் பொறுப்புகள் வீரர்களின் உடல் மற்றும் மன உறுதிப்பாட்டைப் பாதிக்கக் கூடாது என்பதாலேயே இத்தகைய ‘கண்டிப்பு’ காட்டப்படுவதாக ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
