பாஜகவின் ஆரம்பகால தூண்களில் ஒருவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான கபீந்திர புர்காயஸ்தா, வயது மூப்பு மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக இன்று (ஜனவரி 7, 2026) காலமானார்.

அசாம் மாநிலத்தில் பாஜகவை வேரூன்றச் செய்ததில் இவருக்கு மிக முக்கிய பங்கு உண்டு. மறைந்த பிரதமர் வாஜ்பாய் அமைச்சரவையில் தகவல் தொடர்புத் துறை இணை அமைச்சராகப் பணியாற்றிய இவர், தனது வாழ்நாள் முழுவதும் மக்கள் பணிக்காகவே அர்ப்பணித்தவர்.

கபீந்திர புர்காயஸ்தாவின் மறைவுக்குப் பிரதமர் நரேந்திர மோடி தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், “கபீந்திர புர்காயஸ்தாவின் மறைவுச் செய்தி கேட்டு மிகுந்த வேதனை அடைந்தேன்.

அசாமில் பாஜகவை வளர்த்தெடுத்ததில் அவரது உழைப்பு அளப்பரியது. சமூகத்திற்காக அவர் ஆற்றிய அர்ப்பணிப்பு மிக்க சேவைகள் எப்போதும் நினைவுகூரப்படும்” என உருக்கமாகத் தெரிவித்துள்ளார். இவரது மறைவு அசாம் மாநில அரசியலிலும், பாஜக வட்டாரத்திலும் ஈடுசெய்ய முடியாத இழப்பாகக் கருதப்படுகிறது.