ரயில் டிக்கெட் முன்பதிவில் நடைபெறும் முறைகேடுகள் மற்றும் போலி முன்பதிவுகளைத் தவிர்க்கும் பொருட்டு, பயணிகள் தங்களது ஐஆர்சிடிசி (IRCTC) கணக்குடன் ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக ரயில்வே வாரியம் அறிவித்துள்ளது.

ரயில் டிக்கெட் முன்பதிவு தொடங்கும் முதல் நாளிலேயே டிக்கெட் எடுக்க விரும்புவோருக்கு ஆதார் கட்டாயம் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. கடந்த மாதம் 29-ஆம் தேதி முதல் இந்த நடைமுறை அமலுக்கு வந்தது. அதன்படி, காலை 8 மணி முதல் நண்பகல் 12 மணி வரை ஆதார் எண் இருந்தால் மட்டுமே டிக்கெட் முன்பதிவு செய்ய முடியும் என்ற நிலை இருந்தது.

தற்போது இந்த கால அளவு மாலை 4 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், முன்பதிவு தொடங்கும் முதல் நாளில் (Opening Day) மாலை 4 மணி வரை ஆதார் இணைக்கப்பட்ட கணக்குகள் மூலம் மட்டுமே டிக்கெட் எடுக்க முடியும்.

இதற்கிடையே, வரும் ஜனவரி 12-ஆம் தேதிக்குப் பிறகு, ஐஆர்சிடிசி இணையதளத்தில் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்ய ஆதார் எண் இணைக்கப்பட்டிருப்பது முழுமையாகக் கட்டாயமாக்கப்படுகிறது. ஆதார் எண் இணைக்கப்படாத கணக்குகளில் இனி டிக்கெட் முன்பதிவு செய்ய முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

அதே நேரத்தில் தட்கல் முறையில் டிக்கெட் எடுக்க ஏற்கனவே ஆதார் எண் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ரயில் நிலையங்களில் உள்ள முன்பதிவு மையங்களில் (Counters) நேரடியாக டிக்கெட் எடுப்பதில் தற்போது எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை. அங்குக் வழக்கம்போல டிக்கெட் பெற்றுக்கொள்ளலாம். இடைத்தரகர்களின் ஆதிக்கத்தைக் குறைக்கவும், டிக்கெட் கறுப்புச் சந்தையில் விற்பனை செய்யப்படுவதைத் தடுக்கவும் இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

எனவே, பயணிகள் சிரமமின்றிப் பயணம் செய்யத் தங்களது ஐஆர்சிடிசி கணக்கில் ‘Link Aadhaar’ வசதியைப் பயன்படுத்தி உடனே ஆதார் எண்ணை இணைத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.