புதுச்சேரியில் பணியாற்றி வந்த பிரபல பெண் ஐபிஎஸ் அதிகாரி இஷா சிங் டெல்லிக்கு இடமாற்றம் செய்யப்பட்ட நிலையில், அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள உருக்கமான பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
கடந்த மாதம் 9-ஆம் தேதி புதுச்சேரி உப்பளம் ஹெலிபேடு மைதானத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் லஞ்ச ஒழிப்புத் துறை சீனியர் எஸ்பி மற்றும் ஐஆர்பிஎன் கமாண்டன்டாகப் பணியாற்றிய இஷா சிங், கூட்டத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் மிகச் சிறப்பாகச் செயல்பட்டார். குறிப்பாக பாஸ் இல்லாதவர்களை உள்ளே அனுமதிக்க வேண்டும் என புஸ்ஸி ஆனந்த் கூறிய நிலையில் உங்களால் கரூரில் ஏற்கனவே நிறைய பேர் இறந்து விட்டார்கள் எனவே என்ன செய்ய வேண்டும் என எனக்கு நீங்கள் கூறாதீர்கள் என அவர் கட்டளையிட்ட வீடியோ சமூக வலைதளத்தில் மிகவும் வைரலானது. இதனை தொடர்ந்து புதுவை உள்துறை அமைச்சர் நமச்சிவாயத்தின் பாராட்டையும் பெற்றது.
புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது கடற்கரைக்கு வந்த பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள், இஷா சிங்கை அடையாளம் கண்டு அவரிடம் வாழ்த்து தெரிவித்ததுடன் ஆர்வத்துடன் செல்பி எடுத்துக் கொண்டனர். ஒரு காவல் அதிகாரிக்கு மக்கள் மத்தியில் கிடைத்த இந்த வரவேற்பு அனைவரையும் வியக்க வைத்தது.
இத்தகைய சூழலில், கடந்த 4-ஆம் தேதி இஷா சிங் திடீரென டெல்லிக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். மேலதிகாரிகளின் அழுத்தம் காரணமாகவே இந்த இடமாற்றம் நிகழ்ந்ததாகப் பேசப்பட்ட நிலையில், இது புதுச்சேரி மக்களிடையே பெரும் வருத்தத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது.
தற்போது பணியிட மாறுதல் பெற்றுச் சென்றுள்ள இஷா சிங், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இது குறித்துப் பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: “புதுச்சேரி மக்கள் மிகவும் அன்பானவர்கள். அவர்களை நான் மிகவும் ‘மிஸ்’ செய்கிறேன். நான் டெல்லிக்கு மாறுதலாகிச் சென்றாலும், புதுச்சேரியும் தமிழ்நாடும் எனது வாழ்வின் ஒரு அங்கமாக எப்போதும் இருக்கும்.”
அதிகாரியின் இந்த உருக்கமான பதில், அவர் மீது அன்பு செலுத்திய புதுச்சேரி வாசிகளை மேலும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஒரு கட்சியின் மாநாட்டில் சிறப்பாகப் பணியாற்றியதற்காகவும், மக்கள் மத்தியில் செல்வாக்கு பெற்றதற்காகவும் ஒரு நேர்மையான அதிகாரி இடமாற்றம் செய்யப்பட்டாரா? என்ற கேள்வி தற்போது புதுச்சேரி அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது.
