மத்தியப் பிரதேச மாநிலம் பேதுல் மாவட்டத்தில், 21 வயது இளம் பெண் ஒருவர் தான் நம்பிய நண்பனாலேயே ஏமாற்றப்பட்டு, கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட கொடூர சம்பவம் நடந்துள்ளது. கடந்த ஜனவரி 3-ஆம் தேதி, வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் ஷம்பு நாவ்டே என்ற தனது நண்பரை நம்பி அந்தப் பெண் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார்.
ஆனால், அந்த நபர் தனது நண்பர்களுடன் சேர்ந்து அப்பெண்ணைக் காட்டுப் பகுதிக்குக் கடத்திச் சென்று கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். பின்னர், அந்தப் பெண்ணைத் தனியாகக் காட்டிலேயே விட்டுவிட்டு அவர்கள் தப்பிச் சென்றுள்ளனர்.
இந்த அதிர்ச்சியில் இருந்து மீள முடியாமலும், ஊருக்குத் திரும்ப வழியில்லாமலும் தவித்த அந்தப் பெண், தவா ஆற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். ஆனால், ஆற்றில் நீர் குறைவாக இருந்ததால் அவர் உயிர் தப்பினார்; இருப்பினும் அவரது இடுப்புப் பகுதியில் பலத்த எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அந்தப் பெண் அளித்த தகவலின் பேரில், தலைமறைவாக முயன்ற ஷம்பு நாவ்டே, பங்கஜ் உய்கே மற்றும் ராவத் உய்கே ஆகிய மூன்று பேரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். பாதிக்கப்பட்ட அந்தப் பெண்ணுக்குத் தற்போது தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
