ஒடிசா மாநிலம் ராயகடா மாவட்டத்தில், விறகு சேகரிக்கச் சென்ற மாற்றுத்திறனாளி சிறுமி ஒருவரை மூன்று பேர் கொண்ட கும்பல் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மதியம் தனது கிராமத்திற்கு அருகிலுள்ள வனப்பகுதிக்குச் சென்ற அந்தச் சிறுமியை, அங்கு வந்த மர்ம நபர்கள் வழிமறித்து இந்தக் கொடூரத்தைச் செய்துள்ளனர். வீட்டிற்குத் திரும்பிய சிறுமி நடந்தவற்றைக் கூறி அழுததைக் கேட்டு அதிர்ச்சியடைந்த அவரது தாய், உடனடியாகக் காவல்துறையில் புகார் அளித்தார்.

சிறுமியின் புகாரின் பேரில் தீவிர விசாரணை மேற்கொண்ட போலீசார், தலைமறைவாக இருந்த குற்றவாளிகள் மூன்று பேரையும் இன்று கைது செய்தனர். கைது செய்யப்பட்ட மூவரும் தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இருப்பினும், பிடிபட்டவர்களின் பெயர் மற்றும் விவரங்களை காவல்துறையினர் இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை. இச்சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பையும் ஆத்திரத்தையும் ஏற்படுத்தியுள்ளது.