உத்தரகாண்ட் மாநில அமைச்சரின் கணவர் பப்பு பார்தி, பீகார் மாநிலப் பெண்கள் குறித்துப் பேசியுள்ள கருத்து தற்போது சமூக வலைதளங்களில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. “பீகார் மாநிலத்திற்குச் சென்று 20 முதல் 25 ஆயிரம் ரூபாயை எடுத்து வீசினால் போதும், திருமணம் செய்து கொள்ள பெண்கள் போட்டி போட்டுக்கொண்டு ஓடி வருவார்கள்” என்று அவர் பேசியுள்ள காணொளி எக்ஸ் (X) தளத்தில் வைரலாகி வருகிறது. பெண்களைக் கேவலப்படுத்தும் விதமாகவும், வறுமையைப் பகடி செய்யும் விதமாகவும் அமைந்துள்ள இவரது இந்தப் பேச்சுக்கு அரசியல் தலைவர்களும் சமூக ஆர்வலர்களும் கடும் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.

​பெண்களின் கண்ணியத்தைக் குறைத்து மதிப்பிடும் வகையில் ஒரு பொறுப்பான இடத்தில் இருப்பவரின் குடும்ப உறுப்பினர் பேசியிருப்பது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் பேச்சு பீகார் மக்களின் உணர்வுகளைப் புண்படுத்துவது மட்டுமின்றி, பெண்களை ஒரு பொருட்டாகச் சித்தரிப்பதாகவும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. இது தொடர்பான வீடியோ வேகமாகப் பகிரப்பட்டு வரும் நிலையில், சம்பந்தப்பட்ட அமைச்சர் இது குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் அல்லது மன்னிப்பு கேட்க வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுத்து வருகின்றன.