தஞ்சாவூரில் உற்சாகமாகத் தொடங்கிய அமமுக-வின் பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டத்தில், அக்கட்சியின் பொதுச்செயலாளராக டிடிவி தினகரன் ஒருமனதாக மீண்டும் தேர்வு செய்யப்பட்டார். தொண்டர்களின் பலத்த ஆரவாரத்திற்கு இடையே இந்தப் பொறுப்பை ஏற்றுக்கொண்ட அவர், வரும் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான கட்சியின் வியூகம் குறித்து அதிரடியாகப் பேசினார். “அமமுக எந்தக் கூட்டணியில் இடம்பெறுகிறதோ, அந்தத் தான் வரும் தேர்தலில் ஆட்சியைப் பிடிக்கும்” என்று முழங்கிய அவர், தமிழகத்தில் ஊழலற்ற ஆட்சியை உருவாக்கத் தனது கட்சி உறுதுணையாக இருக்கும் என்று உறுதி அளித்தார்.

​மேலும், கூட்டணி குறித்து சமூக வலைதளங்களில் வெளியாகும் பல்வேறு தகவல்கள் குறித்துப் பேசிய தினகரன், “எங்களது கூட்டணி குறித்து வரும் வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம்; சரியான நேரத்தில் முறைப்படி அறிவிக்கப்படும்” என்று தெளிவுபடுத்தினார். தமிழகத்தின் நலனை மட்டுமே கருத்தில் கொண்டு அமமுகவின் அடுத்தகட்ட நகர்வுகள் இருக்கும் என்றும் அவர் கூறினார். தினகரனின் இந்த தன்னம்பிக்கையான பேச்சு, அமமுக தொண்டர்களிடையே புதிய உத்வேகத்தை ஏற்படுத்தியுள்ளது.