எலான் மஸ்கின் எக்ஸ் நிறுவனத்தின் அங்கமான கிரோக் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம், பெண்களின் புகைப்படங்களை ஆபாசமாகச் சித்தரிக்கப் பயன்படுத்தப்படுவதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து மத்திய அரசு கடும் நடவடிக்கை எடுத்துள்ளது. கிரோக் ஏ.ஐ. மூலம் பெண்கள் மற்றும் சிறுமிகளின் படங்களைச் சட்டவிரோதமாக உருமாற்றி எக்ஸ் தளத்தில் பதிவேற்றம் செய்யும் போக்கு அதிகரித்து வருவது குறித்து சிவசேனா எம்பி பிரியங்கா சதுர்வேதி நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பினார்.

இதனைத் தொடர்ந்து, இந்தியத் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் எக்ஸ் நிறுவனத்திற்கு 72 மணிநேர கெடு விதித்து நோட்டீஸ் அனுப்பியது. அதில், ஆபாசமான மற்றும் சட்டவிரோதமான பதிவுகளை உடனடியாக நீக்க வேண்டும் என்றும், இந்த அத்துமீறல்களைத் தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

மத்திய அரசின் இந்த அதிரடி எச்சரிக்கையைத் தொடர்ந்து, எக்ஸ் நிறுவனம் தனது கொள்கைகளில் மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளது. கிரோக் ஏ.ஐ. தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ஆபாசமான அல்லது பாலியல் ரீதியான படங்களை உருவாக்குபவர்கள் மற்றும் பதிவேற்றுபவர்களின் கணக்குகள் நிரந்தரமாக முடக்கப்படும் என்று எக்ஸ் நிர்வாகம் அறிவித்துள்ளது.

செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி ஒருவரின் கண்ணியத்தைக் குலைக்கும் வகையில் தகவல்களைப் பரப்புவது சட்டப்படி கடும் குற்றமாகும் என்றும், அத்தகைய நபர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கைகள் பாயும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பான இணையச் சூழலை உறுதி செய்யத் தவறும் பட்சத்தில், எக்ஸ் தளம் இந்தியாவில் கடும் சட்ட விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்று மத்திய அரசு திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.