அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோவை அதிரடியாகக் கைது செய்த சம்பவத்தைச் சுட்டிக்காட்டி, பிரதமர் நரேந்திர மோடிக்கு அகில இந்திய மஜ்லிஸ் கட்சித் தலைவர் அசாதுதின் ஒவைசி புதிய யோசனை ஒன்றை முன்வைத்துள்ளார். அமெரிக்காவால் தனது எதிரி நாட்டு அதிபரைச் சிறைப்பிடிக்க முடியும் என்றால், பிரதமர் மோடியாலும் பாகிஸ்தானுக்குள் நுழைந்து பயங்கரவாதிகளைப் பிடித்து வர முடியும் என்று அவர் தெரிவித்தார்.

குறிப்பாக, 2008-ஆம் ஆண்டு மும்பை பயங்கரவாதத் தாக்குதலுக்கு மூளையாகச் செயல்பட்ட சதிகாரர்களைப் பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்குக் கொண்டு வர வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ஒவைசி, லஷ்கர்-இ-தொய்பா அமைப்பின் பயங்கரவாதிகள் அல்லது மசூத் அசார் போன்ற கொடூரமான குற்றவாளிகள் யாராக இருந்தாலும் அவர்களைப் பிரதமர் மோடி இந்தியாவுக்குக் கொண்டு வந்து தண்டிக்க வேண்டும் என்றார்.

அமெரிக்காவின் ‘அப்சல்யூட் ரிசால்வ்’ ராணுவ நடவடிக்கையைப் போல் இந்தியாவும் துணிச்சலான நடவடிக்கையை எடுக்க வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார். டிரம்ப் போன்றவர்களால் சாத்தியமாகும் ஒரு விஷயம் பிரதமர் மோடியாலும் நிச்சயம் முடியும் என்றும், பாகிஸ்தானில் பதுங்கியிருக்கும் பயங்கரவாதிகளை ஒடுக்க இதுவே சரியான தருணம் என்றும் அவர் தனது உரையில் குறிப்பிட்டார்.