உலகப் புகழ்பெற்ற வீட்டு உபயோக மற்றும் கிருமிநாசினி பிராண்டான ‘டெட்டால்’ (Dettol), சீனாவில் வெளியிட்ட தனது புதிய விளம்பரம் ஒன்றில் பெண்களை மிகவும் ஆபாசமாகவும், இழிவாகவும் சித்தரித்ததாக எழுந்த புகாரைத் தொடர்ந்து, அந்த விளம்பரத்தை உடனடியாகத் திரும்பப் பெற்றுக்கொண்டு பகிரங்கமாக மன்னிப்புக் கேட்டுள்ளது. டெட்டால் நிறுவனத்தின் ‘லாண்ட்ரி சானிடைசர்’ (துணிகளைத் தூய்மைப்படுத்தும் திரவம்) விளம்பரத்திற்காக கடந்த மே மாத இறுதியில் இந்த நான்கு நிமிட வணிக விளம்பரம் உருவாக்கப்பட்டது.
தொடக்கத்தில் இந்த விளம்பரம் பெரிய அளவில் கவனிக்கப்படாவிட்டாலும், சில சமூக வலைத்தளப் பதிவர்கள் இதன் வீடியோ காட்சிகளை இணையத்தில் பகிர்ந்ததைத் தொடர்ந்து சீனா முழுவதும் பெரும் சர்ச்சை வெடித்தது. அந்த விளம்பரத்தில் வரும் ஆண் கதாபாத்திரம், பெண்களின் கடந்தகால உறவுகள் குறித்தும், அவர்களின் கன்னித் தன்மை குறித்தும் மிகவும் அசிங்கமான மற்றும் பிற்போக்குத்தனமான வசனங்களைப் பேசுவது போன்ற காட்சிகள் வைக்கப்பட்டிருந்ததே இந்த சர்ச்சைக்கு காரணமாக அமைந்தது.
Oh, Dettol, you really did this one dirty.
Dettol has upset the Chinese internet today over a bizarre ad campaign featuring a man looking for a woman who is “clean” enough to marry. At one point, he says: “It’s okay if I’m not her first, but not when it comes to my future wife.… pic.twitter.com/DRAs7vpmu6
— Manya Koetse (@manyapan) June 22, 2026
அந்த விளம்பரத்தில் நடிக்கும் ஆண், தான் பல பெண்களுடன் பழகியதை ஒப்புக்கொள்ளும் அதே வேளையில், தனது மனைவி மட்டும் கன்னித் தன்மையுடன் சுத்தமாக இருக்க வேண்டும் என்றும், பெண்களின் தூய்மையை ஆண்கள் வெல்லும் ‘போர் பரிசுடன்’ ஒப்பிட்டும், பெண்களின் ஆடைகள் குறித்தும் விமர்சனம் செய்கிறார். விளம்பரத்தின் இறுதியில் அவரது காதலி, “இப்படிப்பட்ட நச்சுத்தன்மை கொண்ட ஆண்கள் கிருமிகளைப் போன்றவர்கள், இவர்களை அழிக்க டெட்டாலைத் தான் பயன்படுத்த வேண்டும்” என்று கூறுவது போல் விளம்பரம் முடிக்கப்பட்டிருந்தது.
இந்த விளம்பரம் சீனப் பெண்களின் உணர்வுகளைக் காயப்படுத்தியதாகக் கூறி, டெட்டால் தயாரிப்புகளைப் புறக்கணிக்கப் பொதுமக்கள் தீவிரமாக அழைப்பு விடுத்து வருகின்றனர். இந்த விவகாரம் குறித்து விளக்கம் அளித்துள்ள டெட்டால் நிறுவனம், பாலின சமத்துவமின்மைக்கு எதிராக விழிப்புணர்வு ஏற்படுத்தவே வெளிப்புறத் தயாரிப்பு நிறுவனம் மூலம் இந்த விளம்பரம் எடுக்கப்பட்டதாகவும், எனினும் தங்களது தரப்புக் கண்காணிப்புத் தவறுகளால் ஏற்பட்ட இந்தத் தவறுக்கு முழுப் பொறுப்பேற்று மன்னிப்புக் கேட்பதாகவும் கூறியுள்ளது.
இந்த விளம்பரம் சீனாவின் விளம்பரச் சட்டம் மற்றும் பெண்கள் உரிமைப் பாதுகாப்புச் சட்டங்களை நேரடியாக மீறியுள்ளதால், டெட்டால் நிறுவனத்திற்குச் சீன அரசு 2 லட்சம் முதல் 10 லட்சம் யுவான் (சுமார் 24 லட்சம் முதல் 1.2 கோடி ரூபாய் வரை) அபராதம் விதிக்க வாய்ப்புள்ளதாகச் சட்ட வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
